10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு இஸ்லாமியர் கூட பாதிக்கப்படவில்லை.. சொல்வது நயினார் நாகேந்திரன்!
சென்னை: 10 ஆண்டு கால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஒரு இஸ்லாமியர் கூட பாதிக்கப்படவில்லை என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு கருப்பு பேட்ஜ் அணிவித்து வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்த நிலையில், பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக இருப்பதுபோன்ற மாயையை உருவாக்குகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு 12 மணி வரை விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதனைத் தொடர்ந்து வக்ஃபு வாரிய திருத்த சட்டம் நிறைவேறியதாக நள்ளிரவு 2 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை சட்டசபைக்கு வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். சட்டசபை வளாகத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு கருப்பு பேட்ஜ் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் வாங்க மறுத்தனர்.
அதேபோல் திமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், வக்ஃபு வாரிய திருத்த சட்டம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதன்பின் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து அதில் 14 திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன்பின்னரே நேற்று இரவு நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷம் எழுப்பி இருக்கிறார்கள்.
பொதுக்கூட்டம் மேடைகள், போராட்டங்களில் எதிர்க்கட்சிகள்தான் கோஷங்கள் எழுப்புவார்கள். ஆனால் சட்டசபையையே போராட்டக் களமாக மு.க.ஸ்டாலின் மாற்றியுள்ளார். இது வருத்தத்திற்குரியது. மத்திய அரசு என்ன திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாஜக இருப்பது போல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
2026ல் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ஏற்கனவே 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஒரு இஸ்லாமியர்களுக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக இருப்பது போல் பேசுகிறார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக இப்படி செய்கிறார்கள். சட்டமன்றத்தில் இப்படி கோஷம் போடுவது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன். இது தேவையில்லாத ஒன்று. அதன் காரணமாகவே பாஜக வெளிநடப்பு செய்துள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications