கடலூர் கண்டெடுத்த படைப்பாளி! 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஜெயகாந்தன்! ஏன் கொண்டாடப்படுகிறார்?
சென்னை: எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கியவாதி, திரைப்பட இயக்குநர், நூல் ஆசிரியர், விமர்சகர் என பல்வேறு பரிமாணங்களை கொண்டுள்ள மறைந்த ஜெயகாந்தன் பற்றித் தான் இன்றைய Throwback stories வரிசையில் பார்க்க இருக்கிறோம்.
இன்று ஜெயகாந்தனின் 8ஆம் நினைவு தினமும் கூட. அதனால் இன்றைய தினம் அவரை பற்றிய ஒரு சிறிய மீள்பார்வை.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த வளர்ந்த இவருக்கு பள்ளிப்படிப்பில் ஆர்வம் இல்லை. இதனால் தந்தை காட்டிய கண்டிப்பால் 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய ஜெயகாந்தன் விழுப்புரத்தில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ஜெயகாந்தனின் மாமா கம்யூனிச கொள்கைகளில் பிடிப்புமிக்கவராக இருந்ததால் அவர் மூலம் பொதுவுடைமை கோட்பாடுகள் பற்றி இளம் வயதிலேயே அறிந்துகொண்டார். விழுப்புரத்தில் உள்ள மாமா வீட்டில் சில மாதங்கள் மட்டுமே இருந்த ஜெயகாந்தன் சென்னைக்கு இடம்பெயர்கிறார்.
அங்கு ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் ஃப்ரூப் ரீடராக பணியை தொடங்கிய அவர் கம்யூனிச தலைவர்களுக்கு பரிச்சயமானார். படிபடியாக இலக்கியத்தின் மீது ஜெயகாந்தனுக்கு நாட்டம் ஏற்பட்டது. இதனால் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை ஆர்வமுடன் கற்றுக்கொண்டார்.
ஒரு காலத்தில் படிப்பு வரவில்லை என்பதால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஜெயகாந்தன், பிற்காலத்தில் தனது புத்தகங்களை பள்ளி நூலகங்களில் வைக்கும் அளவுக்கு தன்னை தனது படைப்பாற்றலால், எழுத்தாற்றலால், உயர்த்திக் கொண்டார்.
ஜெயகாந்தன் எழுதிய முதல் சிறுகதை செளபாக்கியம் என்ற இதழில் 1950ஆம் ஆண்டு வெளிவந்தது. அதற்கு எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு கிடைத்ததால் இது தான் நமது வழி என்பதை தீர்மானித்த ஜெயகாந்தன் தொடர்ந்து எழுதத் தொடங்கினார்.

இவரது படைப்புகள் அப்போதைய முன்னணி இதழ்கள் பலவற்றிலும் வெளியிடப்பட்டதால் ஜெயகாந்தனை ஜெயமும், புகழும் தேடி வரத் தொடங்கியது. சில நேரங்களில் சில மனிதர்கள், ஊருக்கு நூறு பேர், உன்னை போல் ஒருவன், புதுச்செருப்பு கடிக்கும் உள்ளிட்ட தலைப்ப்களில் இவர் எழுதிய படைப்புகளை பிற்காலத்தில் அவரே திரைப்படமாகவும் இயக்கினார்.
ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தை, படம் பார்க்கும் பழக்கமே இல்லாத காமராஜர் பார்த்துவிட்டு ஜெயகாந்தனை பாராட்டிவிட்டு சென்றது தான் அப்போதைய கால கட்டத்தில் பேசு பொருளாக இருந்தது.
கம்யூனிசம் கொள்கையில் ஆரம்பத்தில் பிடிப்புமிக்கவராக இருந்த ஜெயகாந்தன் பிற்காலத்தில் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். அதற்கான காரணங்கள் தனிக்கதை.
இதனிடையே 81 வயது வரை வாழ்ந்த ஜெயகாந்தன், 200 சிறுகதைகள், 30க்கும் மேற்பட்ட குறு நாவல்கள், 17 நாவல்கள், எண்ணற்ற கட்டுரைகள், வரலாற்று நூல்கள் என தன் வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டே இருந்தார். ஜெயகாந்தனின் எழுத்துகளுக்கு என்று ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள்.

சாகித்ய அகாடமி விருது, ஞானபீடம் விருது, ரஷ்ய விருது, பத்ம பூஷண் விருது என தன் வாழ்நாளில் பல உயரிய விருதுகளை பெற்றவர் ஜே.கே. என்றழைக்கப்பட்ட ஜெயகாந்தன். குடிசைப் பகுதி மக்களின் வாழ்வியலை தமிழ் இலக்கியத்துக்குள் கொண்டு வந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர்.
சமூக அக்கறையும், பொதுநலனும் மிக்க படைப்பாளியாகவும் விளிம்பு நிலை மக்களின் குரலாகவும் வாழ்ந்ததால் தான் மறைந்து 8 ஆண்டுகளாகியும் இன்றளவும் ஜெயகாந்தன் கொண்டாடப்படுகிறார்.












Click it and Unblock the Notifications