மொத்தம் 50 குளோபல் கம்பெனிகள்.. தமிழக அரசு போடும் மெகா பிளான்! இது மட்டும் நடந்தால் தெறி மாஸ்தான்
சென்னை: தமிழ்நாடு அரசு புதிய முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மாநில அரசு எடுத்துள்ள மிக முக்கிய நடவடிக்கை குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில், மேலும் பல புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு சமீபத்தில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. இரு நாட்கள் நடந்த இந்த நிகழ்வில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், அதில் முதல் நாளே இந்த இலக்கு அடைந்தது. இரண்டாம் நாள் கூடுதல் முதலீடுகள் குறித்த அறிவிப்பு வெளியானது.
முதலீடுகள்: எப்போதும் சென்னைக்கு மட்டுமே அதிக முதலீடுகள் கிடைக்கும் நிலையில், இந்த முறை தமிழகத்தில் பரவலாக வளர்ச்சி இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் டாவோஸ் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதிலும் தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்க்க சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டது.
டாவோஸில் நடைபெற்ற இந்த உலகப் பொருளாதார மன்றத்தின் 54ஆவது ஆண்டுக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான தமிழகக் குழு கலந்து கொண்டது. அவர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட உலகளாவிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
50 குளோபல் நிறுவனங்கள்: ராக்வெல் ஆட்டோமேஷன், வெஸ்டாஸ், வேலியோ, சுவிஸ்ரீ, மிட்சுபிஷி எலக்ட்ரிக், ஹெச்பி, அக்சென்ச்சர், ஷ்னீடர் எலக்ட்ரிக், மெர்ஸ்க் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி என பல முக்கிய நிறுவனங்களுடன் மாநில அரசின் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளனர். தமிழ்நாட்டில் வந்து முதலீடு செய்யுமாறு அழைத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எலக்ட்ரானிக்ஸ், ஜிசிசி, முதலீட்டு நிறுவனங்கள் காலணி தொழிற்சாலை, சுகாதாரம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் சிங்கப்பூர் உட்படப் பல நாடுகளின் பிரதிநிதிகளையும் தமிழக குழு சந்தித்துள்ளது.
டிஆர்பி ராஜா: இது குறித்து டிஆர்பி ராஜா கூறுகையில், "உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டது என்பது சர்வதேச பொருளாதாரப் போக்குகளுடன் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையைப் பொருத்திப் பார்ப்பதில் மற்றொரு முக்கிய படியாகும். நாங்கள் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இதை நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வோம்" என்று அவர் தெரிவித்தார்.
இப்போது இவை வெறும் பேச்சுவார்த்தையாக மட்டும் இருந்தாலும் கூட, இதை வரும் மாதங்களில் நடக்கும் சந்திப்புகளில் இவற்றை முதலீடுகளாக மாற்றுவோம் என்று தொழில்துறைச் செயலர் அருண் ராய் நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து கயிடன்ஸ் தமிழ்நாடு அமைப்பின் சிஇஓ விஷ்ணு கூறுகையில், "மாநிலத்தில் புதிய முதலீடுகளைப் பெறப் பல வலுவான வழிகளை உருவாக்கியுள்ளோம். வரும் காலத்தில் தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் இதை முதலீடுகளாக மாற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார். இந்த உலகப் பொருளாதார மன்றத்தின் தமிழ்நாடு அரங்கில் இரு முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டன... அதற்கும் நல்ல வரவேற்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications