புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு.. பிரதமர் மோடிக்கு தேசம் நன்றியுடன் இருக்கும்.. ஆளுநர் ஆர்.என் ரவி
சென்னை: புதிய நாடாளுமன்றம் தேசத்திற்கு பெருமை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் பாராட்டி ட்விட் போட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்தியா கேட்டில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்துடன் குடியரசு தலைவர் மாளிகை வரையிலான புனரமைப்புகள் அனைத்தும் 'சென்டிரல் விஸ்டா' என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற நிலையில், கடந்த மாதம் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று ( மே 28) புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதற்கான பூஜைகள் உள்பட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை 7.30 மணி முதல் தொடங்கியது. புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு ஆதீனங்களால் வழங்கப்பட்ட செங்கோலை நிறுவினார்.
நண்பகல் மணியளவில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விழாவில் 2 குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. ஆனால், திட்டமிட்டபடி நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடியே திறந்து வைப்பார் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால், எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் உள்பட 20 ஆதீனங்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். திறப்பு விழா காரணமாக நாடாளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தும் திருப்பிவிடப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றம் தேசத்திற்கு பெருமை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் பாராட்டி ட்விட் போட்டுள்ளார். அவர் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- நமது தேசத்தின் ஒளிமயமான கடந்த காலத்தையும், எழுச்சிமிக்க நிகழ்காலத்தையும், பிரகாசமான எதிர்காலத்தையும் பிரதிபலிக்கும் நமது புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழாவில் உலகெங்கிலும் உள்ள ஒவ்வோர் இந்தியருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.
புனித செங்கோலை, அதிகார மாற்ற கலாசாரம் & சுதந்திரத்தின் அடையாளமாகவும் நியாயமான ஆளுகையை தொடர்ந்து நினைவூட்டவும் நாடாளுமன்றத்தில் அதற்குரிய இடத்தில் வைப்பது, ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். இதற்காக மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications