ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்! சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் இனி 50% வாடகை சலுகை!
சென்னை: தொழிலாளர்களின் வீட்டு வாடகை சலுகை (HRA) மற்றும் வருமான வரி தாக்கல் முறைகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மிக முக்கியமான மாற்றங்கள் கவனம் பெற்றிருக்கின்றன. பழைய வரி முறையை பின்பற்றுபவர்களுக்கு HRA விலக்கு அளிப்பதில் ஒரு பெரிய மாற்றம் முன்மொழியப்பட்டுள்ளது.
சமீபகாலமாக அரசு புதிய வரி முறையை நோக்கி மக்களை ஈர்த்து வந்த நிலையில், இந்த புதிய மாற்றங்கள் பழைய வரி முறையை மீண்டும் வலிமையாக்குகின்றன. குறிப்பாக, பல ஆண்டுகளாக மாறாமல் இருந்த சலுகைகள் இப்போது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

இதுவரை டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே 50% வீட்டு வாடகைப்படி (HRA) வரி விலக்கு வழங்கப்பட்டது. இனி இந்த பட்டியலில் கீழ்கண்ட நகரங்களும் இணைகின்றன.
- பெங்களூரு
- ஹைதராபாத்
- புனே
- அகமதாபாத்
இதன் மூலம் இந்த நகரங்களில் வாடகைக்கு இருக்கும் ஊழியர்கள் அதிக வரி சேமிப்பை பெறலாம். பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, சுமார் 20-30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படிகள் மாற்றப்பட்டுள்ளன. கல்விப்படி மாதம் ₹100 என்பதிலிருந்து ₹3,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. விடுதி செலவுப்படி மாதம் ₹300 என்பதிலிருந்து ₹9,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
தற்போது வரி செலுத்துவோர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான சிக்கல்களைக் குறைக்க, வருமான வரி விதிகள் 511-லிருந்து 333 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. வரி படிவங்கள் 399-லிருந்து 190 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரம் வெளிநாட்டில் ஈட்டப்படும் வருமானத்திற்கான வரிச் சலுகை கோருவதில் கூடுதல் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. ₹1 லட்சத்திற்கு மேல் வெளிநாட்டு வரி செலுத்தியிருந்தாலோ அல்லது அது ஒரு நிறுவனமாக இருந்தாலோ, பட்டயக் கணக்காளர் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த 'புதிய வருமான வரிச் சட்டம் 2025' வரும் 2026, ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அரசு வாய்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications