சென்னையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ.6000.. வங்கி கணக்கில் எப்போது? பொதுமக்கள் கேள்வி
சென்னை: வெள்ள நிவாரணத்திற்கான விண்ணப்பம் வழங்கி சுமார் 25 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை சென்னையில் ரேஷன் கார்டு இல்லாத மக்களுக்கு வெள்ள நிவாரணம் வந்து சேரவில்லை. விரைவில் வெள்ள நிவாரணம் 6000 ரூபாயை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய நிலங்களில் வீசிய மிகஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6000/ வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படியே வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.
அதேநேரம் மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு/ மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் தங்கள்து வாழ்வாதாரம் பாதிபபு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், பாதிப்பு விவரங்களை தங்களது வங்கி கணக்கு விவரத்துடன் தங்கள் பாதிப்புக்குரிய நியாயவிலை கடைகளில் விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் அவர்களின் வங்கி கணக்கில் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மக்கள் வழங்கினர். சுமார் 5.5லட்சம் பேர் 6000 நிவாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் இதுவரை 6000 நிவாரணம் வங்கி கணக்கிற்கு வரவில்லை..
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ள நிவாரணம் தொடர்பாக கடந்த வாரம் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்,"சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரத்து 450 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக விடுவிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 15ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், நிவாரண உதவிக்கோரி விண்ணப்பிக்கும், குடும்பங்களில் தோராயமாக 10 சதவீத குடும்பத்தினருக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் 31 கோடியே 74 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதுவரை, 23 லட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக, நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், நிவாரணத் தொகை கோரி அளிக்கப்பட்டுள்ள 7 லட்சத்து 3 ஆயிரத்து 170 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வங்கி மூலம் நிவாரணத் தொகை டெபாசிட் செய்யப்படும்" என்று கூறப்பட்டிருந்தது.
பொங்கலுக்கு முன்பாக வெள்ள நிவாரம் 6000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படுமா இல்லையா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. வெள்ள நிவாரம் கேட்டு விண்ணப்பித்து சுமார் 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், 6000 வெள்ள நிவாரணத்தை பொங்கலுக்கு முன்பாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications