நடிகர் விஜய்யின் உறவினர்.. மாஸ்டர் தயாரிப்பாளர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை.. என்ன காரணம்?
சென்னை: மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அடையாறில் இருக்கும் இவரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் நேற்று காலையில் இருந்து ஷியோமி ( xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சீன நிறுவனமான ஷியோமி ( xiaomi) நிறுவனத்தின் போன் விற்பனை தொடர்பாகவும், அவர்களின் வருமான வரி கணக்கு தொடர்பாகவும் சோதனை செய்யும் வகையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் மட்டும் 25 இடங்களில் இதற்காக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனை
இந்த நிலையில் பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட வேறு சில நகரங்களிலும் சீன நிறுவனமான ஷியோமி ( xiaomi)க்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் ஷியோமி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஷியோமி சார்பாக யாரெல்லாம் இந்தியாவில் ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறார்கள் என்று லிஸ்ட் எடுக்கப்பட்டது.

ரெய்டு
இந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களில் இன்று வருமானவரித்துறை ரெய்டு நடக்கிறது. இந்த நிலையில்தான் ஷியோமி போன்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் காரணத்தால் மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ஷியோமி போன் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதியை கையாள்வதில் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருவதால் இந்த ரெய்டு அங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யார் இவர்?
சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய்யின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. செல்போன் நிறுவன ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான சில நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார். சேவியர் பிரிட்டோ திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் ஆவார். இவர் ஏற்கனவே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.

படங்கள்
XB Film Creators என்ற பெயரில் இவர் தனது தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மாஸ்டர் படத்தை இவர்தான் தயாரித்துள்ளார். விஜய் உடன் "செந்தூரபாண்டி", "தேவா", "ரசிகன்" போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராக பணியாற்றி உள்ளார். மாஸ்டர் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் வீட்டிலும் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications