தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. இந்தி பிரச்சார சபா வெளியிட்ட புள்ளி விவரம்
சென்னை: பாரத் பிரச்சார சபா என்ற கல்வி அமைப்பின் மூலம் இந்தி பயில்வோரில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தி பேசாத தென்னிந்திய மக்களிடையே இந்தி மொழிக் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான் தென்னிந்திய இந்தி பிரச்சார சபை (Dakshina Bharat Hindi Prachar Sabha).
கல்வி அமைப்பான இதன் தலைமையகம் சென்னை, தி.நகரில் உள்ளது. மகாத்மா காந்தியால் இந்த கல்வி அமைப்பு நிறுவப்பட்டது.

பாரத் இந்தி பிரச்சார சபா
பாரத் இந்தி பிரச்சார சபா சார்பில் ஆண்டுதோறும் தேர்வுகள் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தி மொழி பயில்வோருக்காக மொத்தம் 8 தேர்வுகள் வைக்கப்படுகின்றன. பரிச்சயா, ப்ராத்மிக், மத்யமா, ராஷ்ட்ரபாஷா, ப்ரவேஷிகா, விஷாரத் பூர்வத், விஷாரத் உத்ரத், ப்ரவீன் பூர்வத் என 8 தேர்வுகள் வைக்கப்படுகின்றன. இந்த தேர்வானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

3 லட்ச மாணவர்கள்
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு வைக்கப்பட்ட இந்தி மொழி பயில்வதற்கான தேர்வுகளில் தமிழகத்தில் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பாரத் இந்தி பிரச்சார சபாவின் செயலர் செல்வராஜன் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு மட்டும் சுமார் 3 லட்ச மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். கடந்த ஆண்டுடன் இதை ஒப்பிடும்போது தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
எப்போதும் நிலையாக இருந்து வந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. இதில் 60 சதவிகிதம் பேர் மாணவர்கள். 30 சதவிகிதம் பேர் வேலை தேடுபவர்கள். 10 சதவிகிதம் பேர் தங்களது விருப்பத்தினால் தேர்வு எழுதியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் கொரோனா ஊரடங்கு சமயத்தில் அதிகம் பேர் இந்தி கற்க ஆர்வம் காட்டியதாக பாரத் இந்தி பிரச்சார சபா மேலாளர் ராம் குமார் தெரிவித்தார்.

ஆன்லைன் வாயிலாக இந்தி கற்றனர்
இது தொடர்பாக ராம் குமார் கூறுகையில், ''கொரோனா வைரஸ் பரவல் காலக்கட்டத்தில் ஊரடங்கு பிறப்பித்திருந்ததால் பலருக்கும் அதிக நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் அதிகம் பேர் ஆர்வமாக இந்தி மொழி கற்றுக்கொண்டனர். இதில் வயது பாரபட்சமின்றி ஏராளமானோர் இந்தி மொழி கற்றனர். தற்போதைய நவீன தொழில்நுட்பத்தை சரியாக உபயோகிக்க தெரியாதவர்கள் கூட, இளைஞர்கள் உதவியுடன் ஆன்லைன் வாயிலாக இந்தி கற்றனர்.

இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம்
ஆன்லைன் வழியாகவே தேர்வும் எழுதினர். இந்தி கற்பதனால் இந்திய அளவில் வேலை கிடைக்கும் என்பதால் பலரும் ஆர்வமுடன் ஆன்லைன் வாயிலாக இந்தி கற்று தேர்வும் எழுதினர். விடைத்தாள்களை கொரியர் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் இளைஞர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருந்தது. இது எங்களுக்கு வியப்பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

30 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி
சென்னையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாரத் இந்தி பிரச்சார சபாவில் தொடக்க நிலை கல்வியில் 30 ஆயிரத்து 985 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும்..உயர்நிலை கல்வியில் 16 ஆயிரத்து 167 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications