சுதந்திர தின விழா: கல்பனா சாவ்லா விருது, நல்ஆளுமை விருதுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: 79 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். முன்னதாக, காவலர்கள், காவல் துறை, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டு சுதந்திர தின பேருரையாற்றினார். தொடர்ந்து, கல்பனா சாவ்லா மற்றும் நல் ஆளுமை விருதுகளை முதல்வர் வழங்கி கெளரவித்தார்.
நாடு முழுவதும் 79 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர், திறந்த ஜீப்பில் வந்து முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சுதந்திர தினக் கொடியேற்றி பேசுகையில், கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு நமது திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடாக அதிகரித்து மாபெரும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது சொல்லியிருந்த 9.6 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட 1.5 விழுக்காடு அதிகம். இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக திகழ்கிறது தமிழ்நாடு. இது வேறெந்த மாநிலமும் பெறாத வளர்ச்சி.
நாட்டின் வளர்ச்சியே 6.5 சதவீதம் தான். ஆனால் தமிழ்நாட்டின் வளச்சி 11.19 சவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்த மக்களுக்கு இது மாபெரும் வெற்றி ஆகும். நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் தமிழ்நாடு 788 புள்ளிகளுடன் இந்தியாவில் 2 வது இடத்தில் உள்ளது.சமூக முன்னேற்ற குறியீடுகளில் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 1.43 சதவீதம் மக்களே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர் என்று கூறினார்.
தொடர்ந்து சுதந்திர தின சிறப்பு விருதுகளை முதல்வர் வழங்கினார். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக பேராசிரியர் காதர் மொகதீன் அவர்களுக்கு முதல் விருதாக தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. துணிவு மற்றும் சாகச செயலுக்காக கல்பனா சாவ்லா விருது இறகுப் பந்துப் போட்டியில் 22 தங்கம், 11 வெள்ளி, 7 பதக்கத்தை வென்ற காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கு வழங்கப்பட்டது.
நல்ஆளுமை விருதுகள்
அன்பாடு ஒன்றில் விழிப்புணர்வு, நீர்வள மேம்பாடு ஆகியவற்றின் மூலம் ஊரக மேம்பாடு முயற்சிகள் மேற்கொண்டதற்காக மருத்துவர் வி.பிரசன்னகுமார் ஐபிஎஸ் உதவி காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் பி.பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வி.யமுனா ஆகியோருக்கு நல் ஆளுமை விருதுகளை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கி கெளரவித்தார்
சுய சான்றிதழ் திட்டத்தின் மூலம் வீடு, கட்டிட வரைபடம் அனுமதி பெறும் முறையை எளிதாக்கி வழங்கியதற்காக ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா, ஐஏஎஸ் அதிகாரிகள் பா.கணேசன், லட்சுமி பிரியா, த. ஆனந்தன் ஆகியோருக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா ஐஏஎஸ், ஆதிதிராவிடர் நலம் ஆணையர் ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை, க.சு.கந்தசாமி ஐஏஎஸ் ஆகியோருக்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
கன்னியாமகுமரியில் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை அமைத்ததற்காக ஐஏஎஸ் அதிகாரி இரா.செல்வராஜுக்கும், தமிழ் மொழியை உலகளவில் மேம்படுத்தியதற்காக தமிழ் இணையக் கல்வி கழகத்தின் இயக்குநர் (பொறுப்பு) ஆர்.கோமகனுக்கும் நல் ஆளுமை விருதை முதல்வர் வழங்கி கெளரவித்தார்.












Click it and Unblock the Notifications