சுதந்திர தின தொடர் விடுமுறை.. விண்ணை தொட்ட ஆம்னி பஸ் கட்டணம்! இதுக்கு ஃபிளைட்லேயே போயிடலாம்
சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினம் என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.2,000, படுக்கை வசதியுடன் பயணிக்க ரூ.4,000 வரை வசூலிக்கப்படுகிறது என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வார இறுதி நாட்கள் மற்றும் அதையொட்டி வரும் சுதந்திர தினம் காரணமாக ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுத்து வருகின்றனர். சென்னையை பொறுத்த அளவில், ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். அதேபோல விழா நாட்களில், பண்டிகை தினங்களில் இம்மக்கள் பெரிய அளவில் சொந்த ஊரை நோக்கி படையெடுக்கின்றனர்.

இப்படி சொந்த ஊர் போகும் போது போதுமான பேருந்துகள் கிடைக்காததால் தனியார் பேருந்துகளை நோக்கி நகர்கின்றனர். ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் நன்றாக காசு பார்க்கின்றன. இந்த முறையும் சுதந்திர தொடர் விடுமுறையை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கட்டணத்தை 30 சதவிகிதமாக உயர்த்தியுள்ளன. பொதுவாக சென்னையிலிருந்து மதுரைக்கு போகவேண்டும் எனில் ரூ.700-900 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் இந்த முறை இது ரூ.2,000-4,000 ஆக உயர்ந்திருக்கிறது.
முன்னதாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டன. ஆகஸ்ட் 11, 12, 13, 15, ஆகிய தேதிகளில் 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. குறிப்பாக சென்னையிலிருந்து 500 பேருந்துகளும், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களிலிருந்து 600 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இருப்பினும் இந்த பேருந்துகளில் முன்பதிவுகள் செய்யப்பட்டு அனைத்து சீட்களும் ஃபுல்லாகிவிட்டன.

அதேபோல சிறப்பு ரயில்களிலும் டிக்கெட்கள் நிரம்பிவிட்டன. எனவே மக்கள் வேறு வழியின்றி தனியார் பேருந்துகளை நாட தொடங்கியுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. தனியார் குளிர்சாதன பேருந்துகளில் மதுரைக்கு செல்ல ரூ.2,000 வசூலிக்கப்படுகிறது. அதேபோல படுக்கை வசதியுடன் பயணிக்க ரூ.4,000 வரை வசூலிக்கப்படுகிறது என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேபோல உள்நாட்டு விமான கட்டணமும் அதிகரித்திருக்கிறது. சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக ரூ.3,000 வசூலிக்கப்படும். அதேபோல திருவனந்தபுரம் செல்ல ரூ.7,000 வரை வசூலிக்கப்படும். ஆனால் இந்த தொடர் விடுமுறையை பயன்படுத்திக்கொண்டு இந்த கட்டணம் அப்படியே இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. விமானத்தில் செல்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களால் இந்த கட்டண உயர்வை தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் பேருந்தில் பயணிப்பவர்கள் சாமானியர்கள். எங்களால் இந்த கட்டண உயர்வை எதிர்கொள்ள முடியவில்லை என்று பயணிகள் புலம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications