வெறும் ரூ.315 செலவு.. பெற்றது 6வது இடம்.. “77 பேர்ல நான்தான் டாப்பு” - தீபன் சக்கரவர்த்தி பெருமிதம்!
வெறும் 315 ரூபாய் செலவழித்து 349 வாக்குகளைப் பெற்றிருக்கிறார் தீபன் சக்கரவர்த்தி.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அனலடித்த சூழலில் சைலண்டாக களமிறங்கி, ஆறாவது இடத்தைப் பிடித்தார் யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி. இந்த இடைத்தேர்தலில் 2 ரெக்கார்டுகளை நிகழ்த்தி இருக்கிறாராம் தீபன் சக்கரவர்த்தி.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு 349 வாக்குகளைப் பெற்று 77 வேட்பாளர்களில் ஆறாவது இடம் பிடித்துள்ளார் யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி
ஈரோடு கிழக்கில் தான் சாதித்தது என்ன என்பது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் சூடு
திமுக அமைச்சர்கள், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் என ஈரோடு கிழக்கு தொகுதியில் திரும்பும் இடமெல்லாம், கூட்டம் கூட்டமாய் வாக்கு சேகரித்தனர். எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் முழுமையாக ஈரோடு தொகுதியைச் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரித்தார். முதல்வர் ஸ்டாலின், பிரச்சாரத்தின் இறுதி நாளில் திறந்த வேனிலும், நடந்து சென்றும் ஓட்டுக் கேட்டார். உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த் போன்ற முக்கிய தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியான பிறகுதான் தேர்தல் களத்தின் சூடு ஆறியுள்ளது.

தீபன் சக்கரவர்த்தி
இந்த இடைத்தேர்தலில் திமுக கூடணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக தவிர மேலும் 73 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் ஒருவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி. அவர் மைக் சின்னத்தில் போட்டியிட்டார். நாமக்கல்லைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி, சில ஆண்டுகள் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராகப் பணியாற்றிவிட்டு தற்போது பயணம் தொடர்பான வீடியோக்களை Chennai Vlogger என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.

செலவே தேவையில்லை
கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார் தீபன் சக்கரவர்த்தி. அப்போது 249 வாக்குகளைப் பெற்றார். சட்டமன்றத் தொகுதியில் ஒரு வேட்பாளர் 40 லட்சம் ரூபாய் வரை தேர்தலுக்கு செலவு செய்துகொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது, ஆனால் இந்த டிஜிட்டல் உலகத்தில் செலவே செய்யாமல் தேர்தலை சந்திக்க முடியும் எனக் கூறி ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் தீபன் சக்கரவர்த்தி ஈரோடு கிழக்கிலும் களமிறங்கினார்.

அதிகபட்ச செலவு
அரசியலில் இளைஞர்கள் அதிகமாக களமிறங்க வேண்டும், தேர்தல் செயல்முறைகளை பொதுமக்களிடையே கொண்டு செல்ல வேண்டும், செலவே இல்லாமல் தேர்தலை சந்திப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட குறிக்கோள்களோடுதான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் களமிறங்கினார் யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி. அதைச் செயல்படுத்தியும் காட்டியுள்ளார். அவரது அதிகபட்ச செலவே டெபாசிட்டாக கட்டிய ரூ. 10 ஆயிரம் பணம் தான்.

மொத்தம் ரூ. 315
தினமும் தனது சொந்த ஊரான நாமக்கல்லில் இருந்து பேருந்தில் ஈரோட்டுக்கு வந்து, தன்னிடம் உள்ள கேமராவில், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் முக்கிய பிரச்சனைகளை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதையே தனது பிரச்சார வழியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு செயல்பட்டார் தீபன். இவரது தேர்தல் செலவு என்பது மைக் சின்னம் கொண்ட ஸ்டிக்கர் அடிப்பதற்கு ஆன ரூ. 315 தானாம்.

349 வாக்குகள்
இந்நிலையில், இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் தீபன் சக்கரவர்த்தி 349 வாக்குகளைப் பெற்று, மொத்தமுள்ள 77 வேட்பாளர்களில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய முன்னணி கட்சிகளின் வேட்பாளர்களை விடுத்து சுயேட்சை வேட்பாளர் எனப் பார்த்தால் இவர் தான் இரண்டாவது ஆள்.

செலவு : ஓட்டு
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தீபன் சக்கரவர்த்தி, "நான் இந்த இடைத்தேர்தலுக்கு அதிகாரப்பூர்வமாக செலவிட்ட தொகை ரூ. 315 ரூபாய் தான். 'செலவு : வாக்கு' விகிதத்தில் 77 வேட்பாளர்களில் நான் தான் முதல் இடத்தில் உள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதியைச் சார்ந்திராத வெளி வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகளைப் பெற்றது நான் தான்" என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications