முதல்வரின் விளக்கம்.. ட்விட்டரில் டிரெண்டாகும் #INDIAisUNION.. அனல் பறக்கும் ட்வீட்கள்.. திடீரென ஏன்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இனி ஒன்றிய அரசு என்றே அழைப்போம் எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது #INDIAisUNION என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
திமுக அரசு பதவியேற்றது முதலிலேயே தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே அழைத்து வருகின்றனர். ஆனால், இதனைத் தமிழ்நாடு பாஜக தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

முதல்வர் விளக்கம்
இது தொடர்பாகச் சட்டசபையிலும் பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அரசு என்று அழைப்பதில் எவ்வித குற்றமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதை மட்டுமே திமுக அரசு பயன்படுத்துகிறது என்றும் ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ட்விட்டர் டிரெண்டிங்
இதுமட்டுமின்றி இனி வரும் காலத்தில் பேட்டிகள் அறிக்கைகள் என அனைத்திலும் ஒன்றியம் என்றே தான் குறிப்பிடுவோம் என்றும் அவர் பேசியிருந்தார். சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அளித்த இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, தற்போது #INDIAisUNION என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
|
அரசியலமைப்பு சட்டம்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் Union government என்றே, அதாவது ஒன்றிய அரசு என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பலரும் பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் அரசியலமைப்பில் இந்தியாவை Federation of states என்பதற்குப் பதிலாக Union of States என்றே குறிப்பிட்டுள்ளனர். எனவே, ஒன்றிய அரசு என்று அழைப்பதே சரி எனக் கூறி வருகின்றனர்.
|
அமைச்சர்களின் ட்விட்டர்
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாகூட தனது ட்விட்டர் bioவில் Union home minister என்றே குறிப்பிட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளனர். அவர் மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி உள்ளிட்ட சில அமைச்சர்களும் கூட Union minister என்றே பதிவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
|
நீதிபதி சந்திரசூட்
மேலும், கொரோனா வேக்சின் தொடர்பான வழக்கில் மத்திய அரசே அனைத்து வேக்சின்களையும் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்த நீதிபதி சந்திரசூட்டின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, அதில் பாரத் எனப்படும் இந்தியா Union of State என்றே அவர் கூறியுள்ளதாகவும் ட்வீட் செய்து வருகின்றனர்.

தேவையற்ற வாதம்
அதேநேரம் சிலர் கொரோனா பாதிப்பு இப்போது உச்சத்தில் இருக்கும்போது மத்திய அரசா ஒன்றிய அரசா என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்றும் முதலில் இரு அரசுகளும் ஒன்றிணைந்து வைரஸ் ஒழிப்பு பணிகளில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளனர்,












Click it and Unblock the Notifications