16,134 அடி உயரத்தில்.. இந்தியா போட்ட 32 கிமீ சாலை.. தலையை சுற்றி விழுந்த டிராகன்.. சீனாவிற்கு ஆப்பு
சென்னை: இந்தியா - சீனா எல்லையிலுள்ள உத்தரகாண்டின் நிலப்பாணி பகுதியிலிருந்து முலிங் லா வரை 32 கி.மீ. தூரத்திற்கான பிரம்மாண்ட சாலையை இந்தியா அமைத்து வருகிறது. இத்திட்டம் இந்திய ராணுவப்படையினர் பயண நேரத்தை பல மணி நேரங்கள் குறைக்கும். சில இடங்களுக்கு செல்ல 4-5 நாட்கள் செலவான நிலையில் இனி 4-6 மணி நேரங்களில் அந்த இடங்களுக்கு செல்ல முடியும்.
ஆண்டு முழுவதும் இராணுவ நடமாட்டத்தை மேம்படுத்தி இது பாதுகாப்பை உறுதி செய்யும். விலை உயர்ந்த விமான பயணத்தை சார்ந்திருக்காமல் இனி சாலைவழி பயணத்தை இதன் மூலம் மேற்கொள்ள முடியும்.

இந்தியா மேற்கொள்ளும் சாலை
மத்திய அரசின் சவாலான எல்லை உள்கட்டமைப்பு திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்தியா-திபெத் எல்லை வரை நீளும் இச்சாலையை எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) கட்டுகிறது. பழைய கரடுமுரடான பாதைக்கு மாற்றாக அமையும் இத்திட்டத்திற்கு சுமார் ₹104 கோடி செலவாகலாம். மத்திய அரசின் ஆவணங்களின்படி, BRO மேற்கொண்ட தீவிர ஆலோசனைக்கு பின் இந்த சாலை கட்டப்பட்டு வருகிறது.
முலிங் லா, சுமார் 16,134 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு பருவகால மலைப்பாதை. இதை எல்லா காலங்களிலும் பயன்படுத்த முடியும். அதாவது கடும் குளிர் காலங்களிலும் பயன்படுத்தலாம். நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படும் மழை காலங்களிலும் பயன்படுத்தலாம்.
இது உத்தரகாண்டையும் திபெத் தன்னாட்சிப் பகுதியையும் இணைக்கிறது. நவீன எல்லைகள் வரையறுக்கப்படுவதற்கு முன்பே, இது வணிகர்கள், பொதுமக்கள் , எல்லைக் காவலாளர்களுக்குப் பாரம்பரிய இமயமலை பாதையாகப் பயன்பட்டது. இப்போது அங்கே முறையான சாலை வருகிறது.
பிரம்மாண்ட சாலை வருகிறது
1962 இந்திய-சீனப் போருக்குப் பிந்தைய தளவாடப் பற்றாக்குறை, கடினமான நிலப்பரப்பாலும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LAC) அருகே சாலை அமைக்க முன்னுரிமை அளிக்காத பழைய பாதுகாப்பு அணுகுமுறையாலுமே இங்கே சாலை இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இந்த நிலைப்பாடு திட்டவட்டமாக மாறியுள்ளது. மோடி அரசின் புதிய திட்டமிடல் காரணமாக அங்கே சாலை வருகிறது.
தற்போது முலிங் லா தளத்தை அடைய ஐந்து நாள் மலையேற்றம் தேவை. துருப்புகள், ரேஷன்கள், எரிபொருள் மற்றும் உபகரணங்கள் சுமை தூக்குபவர்களாலோ அல்லது பொதி சுமக்கும் விலங்குகள் மூலமோ கொண்டு செல்லப்படுகின்றன. பனிக்காலத்தில் பாதை மூடுவதால், இந்திய ராணுவம் முன்சேமிக்கப்பட்ட பொருட்கள், விமான தளவாடங்களையே நம்பியிருக்க நேரிடுகிறது.
பயண நேரம் குறையும்
16,134 அடி உயரத்தில் அமைக்கப்படும் இச்சாலையால் இந்திய ராணுவம் வலிமை அடையும். சில இடங்களுக்கு செல்ல 4-5 நாட்கள் செலவான நிலையில் இனி 4-6 மணி நேரங்களில் அந்த இடங்களுக்கு செல்ல முடியும். தீவிர வானிலையிலும் வாகனப் போக்குவரத்து சாத்தியமாகி, துருப்புகள் சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இது, 2020 கிழக்கு லடாக் மோதலுக்குப் பிறகு இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் வேகத்தை பிரதிபலிக்கிறது. லடாக் மோதலுக்கு பின் எல்லையில் புதிய சாலைகள், பாலங்கள் அமைப்பதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே இந்த பணிகள் நடந்து வருகின்றன. இது கண்டிப்பாக சீனாவிற்கு தலைவலியை கொடுக்கும் என்கிறார்கள் உலக அரசியல் வல்லுனர்கள்.












Click it and Unblock the Notifications