பாஜகவுக்கு ‘வாய்ப்பில்ல ராஜா’.. ஆனால் விஜய் உள்ளே வந்தால்.. இந்தியா டுடே சர்வே சொல்வது என்ன?
சென்னை: இப்போது தேர்தல் நடந்தாலும், பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட வெல்ல முடியாது என இந்தியா டுடே - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உட்பட பல மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்து வரும் நிலையிலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்றக்கும் 'ஜீரோ' தான் என்கிறது கருத்துக்கணிப்பு முடிவுகள்.
இந்தியா டுடே-சிவோட்டர் இணைந்து ஜனவரி 2 முதல் பிப்ரவரி 9, 2025 வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் மூட் ஆஃப் தி நேஷன் (MOTN) என்ற பெயரில் கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில்,1,25,123 நபர்களைச் சந்தித்து அவர்களின் மனநிலை ஆய்வு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் இப்போது தேர்தல் நடந்தால்
அந்தவகையில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் மக்களின் மனநிலையை அறிந்துள்ளது இந்தியா டுடே - சி வோட்டர். இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு எவ்வளவு சீட், எவ்வளவு வாக்கு சதவீதம் கிடைக்கும் என்ற ஆய்வு முடிவுகளை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் வாக்கு சதவீதம் 5% உயர்ந்துள்ளது எனவும், பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் 3% உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதிமுகவின் வாக்கு 3% சரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதம் எப்படி இருக்கும்?
அதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 18% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்தியா கூட்டணி 47% வாக்குகளைப் பெற்றிருந்தது. அதிமுக கூட்டணி 23% வாக்குகளைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்போது இந்த தேர்தல் நடைபெற்று இருந்தால் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 3 சதவீதம் அதிகரித்து 21% வாக்குகளைப் பெற்றிருக்கும். இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் 5% உயர்ந்து 52% ஆக அதிகரித்திருக்கும். அதிமுக கூட்டணியின் வாக்குகள் 23% ல் இருந்து 20 ஆக குறைந்திருக்கும் என இந்தியா டுடே ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக - 0
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 39 இடங்களையும் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி கைப்பற்றியது. ஸ்டாலின் தலைமையிலான திமுக 22 இடங்களை வென்றது, காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றின. இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக அனைத்து இடங்களிலும் வெல்லும் என்றும், பாஜக, அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும், தமிழகத்தில் பாஜக ஒரு சீட்டை கூட வெல்ல முடியவில்லை. அண்ணாமலையே கோவை லோக்சபா தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
பாஜகவுக்கு என்ன வழி?
இப்போது தேர்தல் நடந்தாலும், பாஜக, அதிமுக வெல்ல முடியாது என கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் 2 திராவிடக் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியுள்ள விஜய் உதவியுடன் தான் பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் திமுகவுக்கு சவால் அளிக்க முடியும் எனத் தெரிகிறது.
பாஜக, அதிமுக மற்றும் விஜய்யின் கட்சியுடன் ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே, திமுகவுக்கு கடுமையான சவால் அளிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் இந்தியா டுடே அலசலில் தெரிவித்துள்ளனர்.
சி-வோட்டர் இயக்குனர் யஷ்வந்த் தேஷ்முக் கூறுகையில், தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜய், 2026 இல் நடைபெற உள்ள அடுத்த சட்டமன்றத் தேர்தலில் X ஃபேக்டராக இருக்கக்கூடும். தேசிய அளவில் அதிக செல்வாக்கு இல்லாவிட்டாலும் விஜய் களத்தில் ஒரு முக்கியமான பிளேயராக மாறி வருகிறார். எதிர்க்கட்சி வாக்குகள் பிரிவது என்.டி.ஏ கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications