கமலால் கசிந்த ரகசியம்.. அரசியல் மேடையாக மாறும் இந்தியன்-2, இந்தியன்-3 படங்கள்? சம்பவம் இருக்குமோ
சென்னை: டைரக்டர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன்-2 திரைப்படம் உருவாகி வருகிறது. அதன்பிறகு இந்தியன்-3 திரைப்படம் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தான் கமல் சொன்ன விஷயத்தால் இந்தியன்-2, இந்தியன்-3 திரைப்படங்களில் அரசியல் பேசப்பட்டுள்ளதா? என்ற பெரிய கேள்விகள் எழுந்துள்ளன.
நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996ல் வெளியான திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படம் அந்த காலத்தில் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் கமல்ஹாசனுக்கு தேசிய விருதை பெற்று கொடுத்தது.

இதையடுத்து சுமார் 20 ஆண்டுகள் கழித்த பிறகு இந்தியன் 2 திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாக்க இருவரும் திட்டமிட்டனர். இதையடுத்து இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த படத்தின் படப்பிடிப்பு, டப்பிங் உள்ளிட்ட பணிகளை முடித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் ரீலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு 'இந்தியன் 3' படத்தை 2025ம் ஆண்டுக்குள் திரைக்கு கொண்ட வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இந்தியன்-2 படத்தின் இண்ட்ரோ வீடியோ நேற்று வெளியானது. தமிழில் நடிகர் ரஜினிகாந்த், மலையாளத்தில் மோகன் லால், தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமெளலி, கன்னடத்தில் கிச்சா சுதீப், ஹிந்தியில் அமீர் கான் ஆகியோர் இந்த வீடியோவை வெளியிட்டனர். நடிகர் கமல்ஹாசன் இன்று 69 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது.
இதற்கிடையே தான் இந்தியன்-2, இந்தியன்-3 திரைப்படங்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் இன்று முக்கிய தகவலை தெரிவித்தார். அதாவது சென்னை நீலாங்கரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கமல்ஹாசன் பேசினார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவராகவும் அவர் இருப்பதால் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், இந்தியன்-2, இந்தியன்-3 திரைப்படங்கள் குறித்தும் பேசினார். இதுபற்றி கமல்ஹாசன் பேசியதாவது:
நமக்கு நிறயை பணிகள் இருக்கின்றது. கடந்த வந்த பாதை ஒரு முறை அளந்து பார்க்க வேண்டும். நாளை சென்றடைய வேண்டிய இடத்துக்கு சரியான நேரத்தில் சென்றடைவோம். நாடாளுமன்றத்தில் மக்களின் குரல் கேட்க வேண்டும். அதில் மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும். அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க வேண்டும். நாம் அரசியலில் செய்ய வேண்டிய திட்டங்கள் பற்றி இன்று இங்கு பேச வேண்டாம். ஆனால் இன்றைய விழாவை விட 100 மடங்கான வேலை நமக்கு இருக்கிறது.
மிகச்சிறப்பான சூழல் நம்மை சுற்றி வலம்வர தொடங்கி விட்டது. அதனை நீங்களும் கவனித்து இருப்பீர்கள். அந்த சூழலை நாமும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அந்த தருணத்தை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேர்தல் அறிவிப்பு வந்த உடன் பலமடங்கு வேகமாக பணி செய்ய வேண்டி இருக்கும்.
இதற்காக என் கலையின் மூலமாக என்னால் சொல்ல வேண்டியதை சொல்லி கொண்டிருக்கிறேன். இந்தியன் 2, இந்தியன் 3 படம் வெளிவரும்போது அது அரசியல் மேடையாக மாறும். அதையெல்லாம் நீங்கள் பாருங்கள். அதில் செய்திகள் இருக்கின்றன. நீங்களும், நாங்களும் பேசும் உரையாடல் இருக்கின்றன '' என்றார். இதனால் இந்தியன்-2, இந்தியன்-3 திரைப்படத்தில் கமல்ஹாசன் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசியிருக்கிறாரா? என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications