வெளிநாட்டு மியூசித்தில் சோழர் கால தாமிர தகடு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு சொந்தமான பொருட்களை மீட்க சிறப்புக் குழு அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோவில் சிலைகள், புராதன சின்னங்கள் பல திருடு போய் உள்ளன. விலைமதிக்க முடியாத வரலாற்று பொக்கிஷங்களான இந்த சிலைகள், புராதன சின்னங்கள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன. கோவில் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டு வருகின்றனர்.

இந்த மீட்பு நடவடிக்கைகளில் பல சிரமங்கள் உள்ளன. இந்நிலையில் தான் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சோழர், பல்லவர் காலத்து புராதான சின்னங்கள், பழங்கால கோயில் சிலைகள், அரிய பூஜை பொருட்கள் ஆகியவை வெளிநாட்டினரால் அபகரிக்கப்பட்டு, அமெரிக்காவின் நியூயார்க் ஏசியன் ஆர்ட் மியூசியத்திலும், சிகாகோ ஆர்ட் மையத்திலும் இருப்பதாகவும், ராஜராஜசோழன் காலத்தில் ஆனைமங்கலம் கிராமத்திலிருந்த தாமிர தகடுகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தாமிரத்திலான பெரிய அளவிலான 21 தகடுகளில் 5ல் சமஸ்கிருதத்திலும், 16ல் தமிழிலும் எழுதப்பட்டுள்ளதாகவும், சிறிய அளவிலான 3 தாமிர தகடுகளும் இருப்பதை லேடன் பல்கலைக்கழகமும் உறுதி செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சோழர் கால தாமிர தகடுகளில், கிராமங்களின் வரைபடங்கள், வரி வசூல் முறைகள், பாசன திட்டங்கள், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன என்றும், நாகப்பட்டினத்தில் சோழர்கள் ஆட்சி காலத்தில் புத்த பிக்குகளின் மத்தியில் எப்படி ஆன்மீகம் பரவியது என்பதும் தாமிர தகடுகளில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு சொந்தமானவற்றை மீட்பதற்கான சிறப்பு குழுவை அமைத்து, மீட்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும், தொல்பொருள் ஆய்வு இயக்குநரகத்திற்கும் கடந்த 2018 செப்டம்பரில் கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை என்பதல, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பிடி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆஜராகி, தாமிர தகடுகளை கேட்டு நெதர்லாந்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதையடுத்து, மனுதாரர் அனுப்பிய கடித்தத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications