காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா?
சென்னை: கடந்த தேர்தலை போல் இந்த முறையும் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் தன் வசப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியின் நிலவரத்தை பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாகவும் மீதமுள்ள 5 தொகுதிகளுக்குத்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அந்த 23 தொகுதிகள்
1) பொன்னேரி (தனி)
2) திருப்பெரும்புதூர் (தனி)
3) சோளிங்கர்
4) உதகமண்டலம்
5) ஈரோடு கிழக்கு
6) அறந்தாங்கி
7) கடலூர்
8) மயிலாடுதுறை
9) காரைக்குடி
10) சிவகாசி
11) திருவாடானை
13) நாங்குநேரி
14) குளச்சல்
15) விளவங்கோடு
16) கிள்ளியூர்
17) வேளச்சேரி
18) ஊத்தங்கரை (தனி)
19) துறையூர் (தனி)
20) ஆத்தூர் (தனி)
21) சிங்காநல்லூர்
22) கிருஷ்ணகிரி
23) அம்பாசமுத்திரம்
இவற்றில் 16 தொகுதிகள் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் ஈரோடு கிழக்குதான் ஹைலைட். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில்தான் இந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.
இங்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வென்றார். பின்னர் 2023 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் அவர் காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். ஓராண்டு எம்எல்ஏவாக இருந்த அவரும் 2024 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வசம் இருந்த ஈரோடு கிழக்கை திமுக கைப்பற்றியது. திமுகவை சேர்ந்த சந்திரகுமார் போட்டியிட்டு வென்றார்.
இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கேட்டு தன்வசப்படுத்தியுள்ளது. இதனால் அந்த தொகுதிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவார்கள் என தெரியவில்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேத்தி சமன்னா, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இளங்கோவன் மறைந்த போதே ஈரோடு கிழக்கு தொகுதியில் அவரது குடும்பத்தினரை வேட்பாளராக களமிறக்க அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் அந்த தொகுதி திமுகவுக்கு சென்றுவிட்டது. இதனால் இந்த முறை எப்படியும் அந்த தொகுதியை கேட்டு வாங்கி அதில் சமன்னாவை போட்டியிட வைக்க டெல்லி காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருந்ததாம். அந்த வகையில் தற்போது கேட்டது போல் ஈரோடு கிழக்கு காங்கிரஸுக்கு கிடைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications