அமெரிக்கா போனால் என்ன? கடல் உணவு வர்த்தகத்தில் கை கொடுத்த சீனா.. காத்து இப்போ நம்ம பக்கம் வீசுது
சென்னை: அமெரிக்க வரி காரணமாக, தூத்துக்குடியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கடல் உணவுகள் அப்படியே பாதி வழியில் திரும்பி வந்தது. அதன் பின்னர் இந்தியாவிலிருந்து கடல் உணவுகள் ஏற்றுமதியாவது குறைந்தது. இப்படி இருக்கையில், தற்போது சீனாவுக்கு கடல் உணவு ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது.
ஜப்பானுக்கும்-சீனாவுக்கும் இடையே பஞ்சாயத்துகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில், ஜப்பானில் இருந்து கடல் உணவு இறக்குமதிக்கு சீனா தடை விதித்திருக்கிறது. எனவே இந்த இடைவெளியை இந்தியா தற்போது நிரப்பி வருகிறது.

அமெரிக்காவின் கடுமையான வரிகளால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய கடல் உணவுத் துறைக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. அமெரிக்க வரி காரணமாக, இந்திய கடல் உணவுத் துறை தென்கிழக்கு ஆசிய சந்தைகளை நோக்கி தனது வணிகத்தை விரிவாக்கி வருகிறது. இந்த விரிவாக்கத்திற்கு இப்போதுதான் கை மேல் பலன் கிடைத்திருக்கிறது.
தைவான் விஷயத்தில் அமெரிக்காவை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. அப்படி இருக்கையில் ஜப்பான் திடீரென சீனுக்குள் வந்து, தைவானுக்கு ஆதரவு தெரிவிக்க, ஜப்பான் நாட்டுடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்வதாக சீனா அறிவித்திருக்கிறது. ஜப்பான் கடல் உணவு இறக்குமதிக்கு சீனா முழுமையாக தடை விதித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, இந்திய கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களின் பங்குகள் 11% வரை உயர்ந்துள்ளன.
தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருங்கிணைந்த கடல் உணவு நிறுவனமான அவந்தி ஃபீட்ஸ், தங்களது பங்குகள் கிட்டத்தட்ட 10% உயர்ந்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. தினசரி ஏற்றுமதியை பொறுத்தவரை, இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத மிகப்பெரிய உயர்வு என்றும் கூறியிருக்கிறது. அதேபோல இந்தியாவின் முன்னணி கடல் உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கோஸ்டல் கார்ப்பரேஷனின் பங்குகள் 5% உயர்ந்துள்ளன.
ஜப்பான் கடல் உணவுகளுக்கு சீனாவில் நல்ல மவுசு உண்டு. ஆனால் இடையில் ஜப்பான், ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் வெளியேற்றிது. என்னதான் இந்த நீர் சுத்திகரிக்கப்பட்டிருந்தாலும், அதில் கதிர்வீச்சுகள் இருக்கும். எனவே ஜப்பான் கடல் உணவுகள் எங்களுக்கு வேண்டாம் என்று கடந்த 2 ஆண்டுகளாக தடை விதித்திருந்தது சீனா. சமீபத்தில்தான் இந்த தடை நீக்கப்பட்டு கடல் உணவுகள் ஏற்றுமதி இயல்பு நிலைக்கு வந்தது. இப்படி இருக்கையில் மீண்டும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஜப்பானின் மொத்த கடல் உணவு ஏற்றுமதியில் 20% க்கும் அதிகமானவை சீனாவுக்குச் சென்றன. ஜப்பானின் மொத்த ஏற்றுமதியில் கடல் உணவுத் துறை சுமார் 1% மட்டுமே என்றாலும், சீன சந்தையை இழந்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications