திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள்! கடந்த தேர்தலை விட சீட் குறைப்பு
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் - காதர் மொகிதீன் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு
திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவினருடன் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் - காதர் மொகிதீன் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. 2021 ஆம் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏணி சின்னத்திலேயே போட்டி
கடந்த தேர்தலில் வாணியம்பாடி, சிதம்பரம், கடையநல்லூர் தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிட்டது. புதுவையில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக காதர் மொகிதின் கூறியுள்ளார். மேலும் ஏணி சின்னத்திலேயே போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் எப்படி?
கடந்த 2021 ஆம் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு மூன்று சீட்களிலுமே தோல்வியை தழுவியது. தனி சின்னத்தில் போட்டியிட்ட அந்த கட்சிக்கு எதிராக மூன்று தொகுதிகளிலும் அதிமுகவே களம் கண்டது.
சிதம்பரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் ஏ.எஸ் அபதுல் ரஹ்மான் ரப்பானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கு.அ பாண்டியன் சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
போட்டியிட்ட 3 இடங்களிலும் தோல்வி
அதேபோல, கடையநல்லூர் தொகுதியில் அதிமுகவை விட சுமார் 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தோல்வியை சந்தித்தது. வாணியம்பாடி தொகுதியிலும் அதிமுகவே போட்டியிட்ட நிலையில், இங்கு 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில்தான், வரும் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு தொகுதியை குறைத்து திமுக ஒதுக்கியுள்ளது. தேமுதிக கூட்டணியில் சேர்ந்துள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் சேரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு திமுக ஒரு சீட் குறைத்து இருப்பதாக தெரிகிறது.
170 - 175 தொகுதிகளில் திமுக?
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு முஸ்லிம் கட்சிகளே இடம் பெற்று இருந்தன. இந்த முறை எஸ்டிபிஐ மற்றும் தமிமுன் அன்சாரி கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. எனினும் இந்தக் கட்சிகள் திமுக சின்னத்திலேயே போட்டியிடலாம் என்று தெரிகிறது. திமுக கடந்த தேர்தலில் 187 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இந்த தேர்தலில் 170 முதல் 175 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications