சென்னை விமான நிலையத்திற்குள்.. ஒரு பயணியை கூட அனுமதிக்க வேண்டாம்! CISFக்கு இண்டிகோ நிறுவனம் கடிதம்
சென்னை: கடந்த சில நாட்களாகவே நாடு முழுக்க பல இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து இயங்கும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரு இண்டிகோ பயணியைக் கூட சென்னை ஏர்போர்ட்டில் அனுமதிக்க வேண்டாம் என சொல்லி இண்டிகோ நிறுவனம் சிஐஎஸ்எஃப் படைக்குக் கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் விமானப் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விமான நிலையங்கள் அதிகரிப்பு, டிக்கெட் ரேட் குறைவு ஆகியவையே இதற்குப் பிரதானக் காரணமாக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விமானத்தில் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தே வருகிறது.

இண்டிகோ
நமது நாட்டில் இண்டிகோ தான் பிரதான விமான நிறுவனமாக இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் விமான நிறுவனமாக இண்டிகோ இருக்கிறது. டாடா வசம் சென்ற ஏர் இந்தியா இப்போது தான் போட்டியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இருப்பினும், அவர்களுக்குப் போதிய விமானங்கள் இல்லை. இதனால் இண்டிகோவின் ஆதிக்கம் தொடர்ந்தே வருகிறது.
இந்த சூழலில் தான் கடந்த சில நாட்களாகவே இண்டிகோ பெரும் பிரச்சினையில் சிக்கியது. வரிசையாகப் பல்வேறு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று முன்தினம் 400+ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் ரத்து செய்யப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 500+ஆக உயர்ந்தது. இண்டிகோ வரலாற்றில் ஒரே நேரத்தில் இத்தனை விமானங்கள் ரத்து செய்யப்பட்டதே இல்லை.
சிரமம்
இதன் காரணமாக விமானப் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஒரேயடியாக இத்தனை விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பல ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் நாடு முழுக்க பல்வேறு ஏர்போர்ட்களிலும் பெரும் குழப்பம் நிலவியது. சென்னை விமான நிலையத்திலும் கூட கிட்டத்தட்ட இதே சூழல் தான். கடந்த சில நாட்களில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மொத்தமாக ரத்து
இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் நிலைமை மேலும் மோசமடைந்தது. சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு இண்டிகோ பயணியைக் கூட சென்னை ஏர்போர்ட்டில் அனுமதிக்க வேண்டாம் என சொல்லி இண்டிகோ நிறுவனம் சிஐஎஸ்எஃப் படைக்குக் கடிதம் எழுதியுள்ளது.
பொதுவாக விமான நிலைய நுழைவாயில் ஒருவரின் டிக்கெட்டை பரிசோதனை செய்த பிறகே சிஐஎஸ்எஃப் படை அவரை உள்ளே அனுமதிக்கும். விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உள்ளே வந்தால் பிரச்சினை ஏற்படும் என்பதாலேயே இண்டிகோ இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் சென்னையில் உள்ள இண்டிகோ பயணிகள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஏர்போர்ட்டில் பல பயணிகள் குழப்பத்தோடு இருப்பதைப் பார்க்க முடிகிறது.
என்ன காரணம்
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்த பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகள் (crew rostering rules) நடைமுறைக்கு வந்திருந்தது. இதில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய விமானிகள் மற்றும் விமானக் குழுவினரின் ஓய்வு நேரம் அதிகரிக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனம் இந்த புதிய விதிகளுக்கு ஏற்ப தனது விமானங்களை மாற்றி அமைக்க முடியவில்லை. இதுவே நாடு முழுக்க பெரும் குழப்பம் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications