166 பேருடன் சென்ற இண்டிகோ விமானம்! நடுவானில் எரிபொருள் கசிவு.. பதறிய பயணிகள்.. அவசரமாக தரையிறக்கம்
சென்னை: கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து 166 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் அவசர அவசரமாக வாரணாசி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 166 பயணிகள் பயணித்த நிலையில், அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
கொல்கத்தாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு 166 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீரென எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுதாரித்த விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.

வாரணாசி அருகே விமானம் சென்று கொண்டிருந்த நிலையில், உடனடியாக அங்குள்ள லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. உரிய நேரத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 166 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தில் திடீரென எரிபொருள் கசிவு ஏற்பட்ட சம்பவம் விமான பயணிகள் இடையே பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது. விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். தற்போது வாரணாசி விமான நிலையத்தில் சூழல் கட்டுக்குள் இருப்பதாகவும் வழக்கம் போல விமான சேவைகள் நடைபெற்று வருவதாகவும் வாரணாசி போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வாரணாசி விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6961 என்ற விமானம் 166 பயணிகளுடன் சென்றுள்ளது. விமானத்தின் எரிபொருள் டேங்கில் கசிவு இருப்பதை கவனித்த விமானி, உடனடியாக விமான கட்டுப்பாட்டு அலுவலரை தொடர்பு நிலமையை கூறினார்.
இதையடுத்து உரிய ஒப்புதல் கிடைத்த பிறகு இண்டிகோ விமானம் வாரணாசியில் இன்று மாலை 4.10 மணியளவில் தரையிறங்கியது. இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
விமானத்தில் பயணம் செய்த 166 பயணிகளும் வாரணாசி விமான நிலையத்தில் உள்ள வெயிட்டிங் ஹாலில் அமர வைக்கப்பட்டுள்ளனர். விமானம் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பழுது சரியானதும் விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications