டிசிஎஸ் எடுத்த முடிவு சாதாரணமானது அல்ல.. ஐடி துறையை ஒரே இரவில் உலுக்கிய Layoffs அறிவிப்பு.. உஷார்
சென்னை: பல ஆயிரம் ஊழியர்களை நீக்குவதாக நேற்று டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு டெக் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
டிசிஎஸ், இன்டெல், மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகின்றன. இதனால் ஊழியர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக, இன்டெல் நிறுவனம் 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்தது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலக அளவில் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
இதுகுறித்து ஒரு தொழில் துறை நிபுணர் கூறுகையில், "இன்டெல் 24,000 ஊழியர்களையும், டிசிஎஸ் 12,000 ஊழியர்களையும், மைக்ரோசாஃப்ட் 10,000 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யவுள்ளன. இன்போசிஸ் ஊதிய உயர்வு வழங்கவில்லை. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய பணியாளர்களை நியமிப்பதில்லை. ஒரு கோடிக்கும் அதிகமானோர் அரசு வேலைகளுக்கு முயற்சி செய்கின்றனர். இந்தியாவின் இளைஞர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்நோக்கி உள்ளனர். தனியார் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை இளைஞர்களை அரசு வேலைகளை நோக்கித் தள்ளும், இதன் காரணமாக அரசு வேலைகளுக்கான போட்டி அதிகரிக்கும்" என்றார்.
தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனித உழைப்பு குறைந்து வருகிறது. திறன்களை மேம்படுத்துவது ஒரு சிறந்த தீர்வாக இருந்தாலும், பிற வேலை வாய்ப்புகளைத் தேடுவதும் அவசியமாகிறது.
டிசிஎஸ் அதிர்ச்சி நடவடிக்கை
டிசிஎஸ் என்பது கிட்டத்தட்ட ஐடி உலகில் பிரஷர்கள் அதிகம் சேரும் நிறுவனம். அரசு நிறுவனம் போல ஊழியர்களை பாதுகாக்கும் நிறுவனம், அத்தனை எளிதாக இது ஊழியர்களை பணியில் இருந்து நீக்காது. ஆனால் அப்படிப்பட்ட டிசிஎஸ் நிறுவனம் மொத்தமாக 12 ஆயிரம் ஊழியர்களை நீக்க முடிவு செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ஐடி துறை மிக மோசமான நிலையை அடைந்து இருப்பதை காட்டுகிறது.
ஏற்கனவே இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகியவை கடுமையான வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. உலக அளவில் வர்த்தக போர் காரணமாக பொருளாதாரம் சார்ந்துள்ள நிலையில் இந்தியாவின் ஐடி நிறுவனங்களும் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS - 4வது காலாண்டில் 1.7% சரிந்து ₹12,224 கோடியாக உள்ளது. அதே சமயம், ஐடி மேஜர் வருவாயில் 5% வளர்ச்சியைப் பதிவுசெய்து ₹64,479 கோடியாக உள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிக குறைவான வளர்ச்சி ஆகும்.
இன்போசிஸ் நிறுவனத்திற்கு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 11.75% குறைந்து ₹7,033 கோடியாக குறைந்துள்ளது. அதே சமயம் அதன் ஐடி வருவாய் 8% அதிகரித்து ₹40,925 கோடியாக உயர்ந்துள்ளது.
விப்ரோ, அதன் Q4 லாபம் 26% உயர்ந்து ₹3,567 கோடியாக இருந்தாலும், அதன் செயல்பாடுகளின் வருவாய் ₹22,504.20 கோடியாக சரிந்து உள்ளது. ஆனால், விப்ரோ உள்ளிட்ட மேஜர் ஐடி நிறுவனங்கள் இப்படி வரிசையாக சரிவை சந்தித்து வருகின்றன. கிட்டத்தட்ட பொருளாதார ரீதியாக இந்த நிறுவனங்கள் கிராஷ் ஆகி உள்ளன.
ஐடி துறை பாதிப்பு
ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டு உள்ளது. அதாவது 15%க்கும் அதிகமாக கிளைண்டுகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் உள்ள அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 11-18 சதவிகிதம் வரை இழந்து உள்ளன.
ஐடி சேவைகளுக்கான மதிப்புகள் குறைய தொடங்கி உள்ளன. இது ஐடி துறை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக மாற தொடங்கி உள்ளது . ஐடி துறையில் அடுத்த ஆண்டு வளர்ச்சி 4%க்கும் குறைவாகவே இருக்கும். வர்த்தக போரால் இந்தியாவில் ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஐடி துறையில் வரும் நாட்களில் வேலை இழப்புகள் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வர்த்தக போர் காரணமாக மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது. இந்திய மார்க்கெட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவை இப்போது உண்மையான மதிப்பை நோக்கி சரிய தொடங்கி உள்ளன. வரும் நாட்களில் இவை மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன. இதுவும் ஐடி துறையை நேரடியாக பாதிக்கும்.












Click it and Unblock the Notifications