ஆர்ப்பரிக்கும் அலைக்கு அணை போட முடியாது! அது போல் தான் அபுல் கலாம் ஆசாத்! இனிகோ இருதயராஜ் ஆதங்கம்!
சென்னை: கல்விக்காக மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆற்றிய பணிகளை, பாட புத்தகத்தில் இருந்து ஒன்றிய அரசு நீக்குவதால், அவரது புகழ் மறைந்துவிடப் போவதில்லை என கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது;

''பொங்கி வந்து ஆர்ப்பரிக்கும் அலைக்கு யாராலும் அணை போட முடியாது. ஓயாமல் ஆர்ப்பரிக்கும் அபுல் கலாமின் புகழை புத்தகங்களிலிருந்து நீக்கிவிட அதிகாரத்தால் சாத்தியப்படும்.
ஆனால், மௌலானா குறித்த பெருமைகளை, சேவைகளை நமது மனங்களில் இருந்து நீக்க எந்த அதிகாரத்தாலும் முடியாது. இந்த தருணத்தில் மௌலானா குறித்து, கே.கே.குல்சார் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை உங்களுக்காக பதிவிடுகிறேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சங்கீத நாடக அகாடமி (1953), சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.
ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்.
கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.

1951ல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.
அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது.''












Click it and Unblock the Notifications