தலைமைச் செயலகமாக மாறுகிறதா ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை? மீண்டும் வைக்கப்பட்ட கல்வெட்டு!
சென்னை
சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.
ஏற்கனவே உள்ள தலைமை செயலகத்திற்கு வயதாகிவிட்டதால் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று கடந்த 2006 மற்றும் 2011ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பில் இருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி முடிவுசெய்தார்.
2007ம் ஆண்டு புதிய தலைமைச் செயலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதில் பங்கேற்றார்.

கருணாநிதி ஆட்சி
தலைமைச் செயலக கட்டிடம் கட்டுவதற்கு 1000 கோடி ரூபாய் திட்ட மதிப்பு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் 581.80 கோடி ரூபாய் செலவிலேயே, அது கட்டி முடிக்கப்பட்டது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் விதான சவுதா போன்ற சட்டசபை கட்டிடங்கள் கலை நயத்தோடு உள்ள நிலையில், இந்த கட்டிடத்தை பார்ப்பதற்கு அழகில்லாமல் இருப்பதாக அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா விமர்சனம் செய்து அறிக்கை கூட வெளியிட்டு இருந்தார்.

மருத்துவமனையாக மாற்றிய ஜெயலலிதா
இந்த நிலையில்தான் 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு பொறுப்புக்கு வந்தது. அந்த வருடம் ஆகஸ்ட் 19ம் தேதி புதிய சட்டமன்ற கட்டிடத்தை பல்நோக்கு அரசு மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு தலைமைச் செயலக கட்டிடம், பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தலைமைச் செயலகமாக திறக்கப்பட்டபோது, மன்மோகன் சிங், கருணாநிதி, சோனியா காந்தி பெயர்கள் பொரித்து, வைக்கப்பட்ட கல்வெட்டு அகற்றப்பட்டது.

திறப்பு விழா கல்வெட்டு
ஜெயலலிதா புதிய மருத்துவமனையை திறந்து வைத்ததற்காக ஒரு கல்வெட்டு அங்கே பொரித்து வைக்கப்பட்டது. இதன் பிறகு திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை . தொடர்ந்து அதிமுக ஆட்சியில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மேலும் மேலும் மேம்படுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில், கருணாநிதி, மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்ற திறப்புவிழா கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பு குழு
சிறப்பு குழுவினர் வருகை தந்து இந்த கல்வெட்டை அங்கு வைத்து விட்டு சென்றனர். புதிய தலைமைச் செயலகம் என்ற பெயர்தான் அந்த கல்வெட்டில் இருப்பதால் ஒருவேளை மருத்துவமனை கட்டிடம் மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தலைமைச் செயலகம்
கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அவரது மகனான முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அரசு மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்றும் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி விடும் என்ற ஒரு பேச்சும் இருக்கிறது.

என்ன காரணம்
இதுவரை அரசிடம் இருந்து அதிகாரபூர்வமாக இது பற்றி தகவல் வெளிவரவில்லை. ஒருவேளை கல்வெட்டை மட்டும் வைத்து விட்டு சென்றிருக்கலாம். இதை தலைமைச் செயலகமாக மாற்றும் எண்ணம் இல்லாமலும் இருக்கலாம் என்கிறார்கள். எது எப்படியோ, அரசு உறுதியான தகவல் தெரிவித்த பிறகு தான் இந்த கல்வெட்டு வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்த பின்னணி தெரிய வரும்.












Click it and Unblock the Notifications