விசிக ஓகே சொன்னாலும்.. ஆளுநர் ஓகே சொல்லமாட்டார்.. விஜய்-க்கு அடுத்த செக் வைக்கும் ராஜேந்திர அர்லேகர்?
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் தொடர்ந்து பரபரப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவும் தற்போது தமிழ்நாட்டின் பக்கம் தான் உள்ளது. விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க வேண்டுமானால் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைமையிலான 2 எம்எல்ஏ-க்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இதில் பெரும் இழுபறி நடந்துக்கொண்டு இருக்கும் வேளையில் ஆளுநர் அடுத்த கட்ட முடிவை எடுக்க உள்ளதாக தெகிறது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்க்கு விசிக ஆதரவுக் கடிதம் வழங்கினாலும், ஆளுநர் உடனடியாக விஜயை முதல்வராக்கவும், ஆட்சி அமைக்கவும் ஒப்புதல் அளிக்க மாட்டார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் மூலம் தவெகவின் ஆட்சி அமைப்பு முயற்சியை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

குதிரை பேரம் குற்றச்சாட்டு
தவெகவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்படும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) எம்எல்ஏ காமராஜ் ஆதரவு அளிப்பதாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
டிடிவி தினகரன் குதிரை பேரம் நடப்பதாக குற்றம்சாட்டிய நிலையில், தவெக தரப்பு ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் காமராஜ் காரில் இருந்தபடி ஆதரவு கடிதத்தில் கையெழுத்திடும் காட்சி இருந்தது. இது தவெக தரப்பே குதிரை பேரத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்துவதாகவும், அதில் போலி கையெழுத்திடப்பட்டு உள்ளதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மோசடி குற்றச்சாட்டுகள்
ஆதரவுக் கடிதங்களில் மோசடி (forgery) நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளதால், ஆளுநர் உடனடியாக விஜயை ஆட்சி அமைக்க அழைக்க மாட்டார் என்று தெரிகிறது. கடிதங்களின் உண்மைத்தன்மையை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சரிபார்ப்பு செயல்முறை சில காலம் எடுக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
ஆளுநர் கேரளா பயணம்
மேலும், ஆளுநர் இன்று மாலை கேரளாவுக்கு புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பயணம் ஆட்சி அமைப்பு தொடர்பான முடிவுகளில் கூடுதல் தாமதத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால் தவெகவின் ஆட்சி அமைப்பு முயற்சி இன்னும் சில நாட்கள் நீண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது.
இது தமிழக அரசியலை மேலும் சிக்கலாக்கியுள்ளன. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், போதுமான ஆதரவை உறுதி செய்ய முயற்சி செய்து வரும் விஜய்க்கு, இந்தச் சரிபார்ப்பு செயல்முறை அச்சுறுத்தல் பெரும் தடையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் தவெக மீது அமமுக குதிரை பேர குற்றச்சாட்டை முன் வைத்துள்ள நிலையில் விஜய் தரப்பில் இருந்தோ அல்லது தவெக தரப்பில் இருந்தோ இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதேபோல் கூட்டணி குறித்து பேசுகையில் விஜய் செல்லாமல் கட்சி உறுப்பினர்களையே அனுப்பி வைப்பது மற்ற கட்சியினருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications