சிங்கப்பெண் அதிரடி படைக்கு உதவி எண் அறிவிப்பு.. 24 மணி நேரமும் செயல்படும்! தமிழக அரசு
சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு உதவி எண் "1091" என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் காவல் உதவியை எளிதாகவும், விரைவாகவும் பெறும் வகையில் 1091 என்ற பிரத்யேக உதவி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் கடந்த 9 ஆம் தேதி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, இலட்சினையை வெளியிட்டு அறிமுகப்படுத்தினார். மேலும், இந்த திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்களை விளக்கும் முன்னோட்ட காணொளியையும் வெளியிட்டார்.

சிங்கப்பெண் படைக்கு உதவி எண் அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் ரோந்து வாகன சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் விஜய், காவலர்கள் பயணித்த வாகனத்தை இயக்கி திட்டத்தின் சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் பேசிய விஜய், தனது நேரடி கண்காணிப்பில் இந்த படை செயல்படும் என கூறினார். பலரும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், அதற்கு பிறகும் பாலியல் குற்றங்கள் அரங்கேறி வந்ததால் சிங்கப்பெண் படைக்கே பாதுகாப்பு தேவைப்படுவதாக அதிமுக குற்றம் சாட்டி இருந்தது.
மேலும் சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு என தனி உதவி எண் இல்லை என்றும், உதவி எண்ணே இல்லாதபட்சத்தில் அதனால் பெண்கள், குழந்தைகள் எப்படி உதவி கோர முடியும் எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தான் தமிழக அரசு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு உதவி எண்ணை இன்று அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, அவசரகால காவல் உதவியை விரைவாக பெறுவதற்காக 1091 என்ற உதவி எண்ணை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும்
இந்த உதவி எண் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்கள், அவசர உதவி கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு தேவைகளை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க முடியும். இதன் மூலம் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிங்கப்பெண் அதிரடிப்படை காவல் கட்டுப்பாட்டு மையம் வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு துரிதமாக பதிலளிக்கவும், உடனடி உதவி வழங்கவும் முடியும் என அதிகாரிகள் கூறினர்.














Click it and Unblock the Notifications