16-வது நாள் காரியத்தில் அதிர்ச்சி.. தோண்டி எடுக்கப்பட்ட சடலம், மாயமான 3.5 சவரன் நகை!
கோவை: கோவையில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை தோண்டி எடுத்து, அதனுடன் இருந்த மூன்றரை சவரன் தங்க நகையை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கடந்த 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சௌரிபாளையம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, தனது தந்தை விருப்பத்துடன் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க நகையை உடலுடன் சேர்த்து அவரது மகன் வெங்கடேஷ் புதைத்ததாக கூறப்படுகிறது.

குடும்பத்தினர் 16-வது நாள் காரியங்கள் முடிந்த பிறகு கல்லறை அமைக்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 16-வது நாள் காரியத்திற்காக இடத்தை சுத்தம் செய்ய வந்தபோது, புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மயானத்தில் இருந்த கார்த்திக் என்பவரிடம் விசாரித்தபோது, சக்திவேல் என்பவர் சிலருடன் சேர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சடலத்தை தோண்டி எடுத்து, அதில் இருந்த 3.5 சவரன் தங்க நகையை எடுத்துச் சென்றதாக தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், சக்திவேல் உயிரிழந்த நாகராஜின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில், சக்திவேல், மணிகண்டன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மீது பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த நபரின் சொத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக BNS சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட மணிகண்டன் அளித்த புகாரில், தங்க சங்கிலி குறித்து கேட்டு தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார். அதன் பேரில் மணி, ரஞ்சித் மற்றும் கார்த்தி ஆகிய மூவர் மீதும் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்ட தங்க நகையை கைப்பற்றும் நோக்கில், மயானத்தில் புதைக்கப்பட்ட சடலமே தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications