வைஷ்ணவிக்கு கித்னா வாய்? நேற்று ஒரு பேச்சு.. இன்னைக்கு ஒரு பேச்சு! சல்லி சல்லியாய் நொறுக்கும் தவெக!
சென்னை: தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகிய இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து விஜயை கடுமையாக அவர் விமர்சித்து வரும் நிலையில் அவரது பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திமுகவுக்கு செல்லும் முன்பும் திமுகவுக்கு சென்ற பிறகும் அவர் பேசிய வீடியோவை வைத்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய் கடந்தாண்டு தமிழக வெற்றி கழகத்தை தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்தே விஜய்க்கு அதிக அளவில் இளைஞர்கள் ஆதரவு இருக்கிறது. குறிப்பாக சினிமா சமூக வலைதளங்களில், இன்ஸ்டாவில் பிரபலமானவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அப்படி இணைந்தவர் தான் கோவையைச் சேர்ந்த வைஷ்ணவி. கோவையில் இன்ஸ்டா வைஷ்ணவி என்றால் அனைவருக்குமே தெரியும். சமூக வலைதளத்தில் அவ்வளவு பிரபலமானவர். அதுமட்டுமல்லாமல் பொது சேவை பணிகளில் ஈடுபட்டு அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு வந்தார்.

தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் ஆரம்பித்தபோது கோவையில் தன்னை கட்சியில் சேர்த்துக் கொண்டார் வைஷ்ணவி. கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்ட அவர் தான் செய்யும் பணிகள் தொடர்பாக வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். தொடர்ந்து அவருக்கு ஆதரவும் குவிந்தது. இந்த நிலையில் திடீரென தமிழக வெற்றிக்கழகத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் வைஷ்ணவி.
தான் அதிக அளவில் பிரபலமாக இருப்பதால் கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் தன்னை ஓரம் கட்டுவதாகவும். கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. கட்சியில் தான் பார்க்கும் வேலைகள் குறித்து சமூக வலைதளங்களில் பேசக்கூடாது, போஸ்ட் போடக்கூடாது என மிரட்டுகிறார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து வைஷ்ணவி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவில் இணைந்தார். அவரது தாயும் திமுகவைச் சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் என் மக்கள் பணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியில் தொடரும் என குறிப்பிட்டு செந்தில் பாலாஜி முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்தார். மேலும் தனது ஆதரவாளர்கள் என சிலரையும் அவர் கட்சியில் சேர வைத்தார்.
பொழைக்கத் தெரிஞ்ச புள்ள ! |@arivalayam @TVKVijayHQ #TVKVijay #DMKFails #Vaishnavi #tnpolitics pic.twitter.com/V8bQ4yBaVs
— Saattai (@SaattaiOnline) June 17, 2025
இந்நிலையில் திமுகவில் சேர்ந்த பிறகு தன்னை தமிழக வெற்றி கழகத்தினர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சிப்பதாகவும், அதனை விஜய் தண்டிக்கவில்லை என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் வைஷ்ணவி. மேலும் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சிகளிலும், யூட்யூப் சேனல்களிலும் பேசி வருகிறார். அப்படி அவர் பேசிய பேச்சுதான் அவருக்கு விமர்சனத்தை பெற்று தந்திருக்கிறது.
அதாவது தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்தபோது சேனல் ஒன்றிடம் பேசிய வைஷ்ணவி, அரசு சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் தோழி மகளிர் விடுதிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அங்கு எவ்வித வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும் பேசியிருந்தார்.
இந்த நிலையில் திமுகவில் சேர்ந்த பிறகு யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசிய வைஷ்ணவி தோழி மகளிர் விடுதிகளை மிகச் சிறந்த முறையில், கட்டணம் இன்றி சேவை வழங்கப்படுகிறது. காவலாளிகள், நமக்கு வசதிகள் செய்து தர வேண்டிய தனி அலுவலர் இருக்கிறார்கள். மேலும் இங்கு தங்கி இருப்பதால் வீடுகளுக்கு பணம் அனுப்ப முடிகிறது என இளம் பெண்கள் தன்னிடம் கூறினார்கள் என பேசி இருந்தார்.
இந்த நிலையில் கட்சியில் சேர்வதற்கு முன்பு பேச்சு, சேருவதற்கு பிறகு ஒரு பேச்சா என அவரை விமர்சித்து வருகின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினர். மேலும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனும் நீ பிழைச்சுக்குவமா? என ஒரு வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதனை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினரும், நாம் தமிழர் தம்பிகளும்..












Click it and Unblock the Notifications