ஜாமீனில் வந்தும் குற்றம் செய்தால் ‛பெயில்’ ரத்து! டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வக்கீல் கடிதம்
சென்னை: ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் அவர்களுடைய ஜாமீனை ரத்து செய்ய அரசு குற்றவியல் வழக்கறிஞரை அணுகி உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும் என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா காவல் துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, " ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் அவர்களுடைய ஜாமீனை ரத்து செய்ய அரசு குற்றவியல் வழக்கறிஞரை அணுகி உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும்.

அதே போன்று, குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும் போது நீதிமன்றங்கள் நிபந்தனைகளை விதிப்பது வழக்கமான ஒன்று. இவ்வாறு நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறுபவர்கள் ஜாமீனையும் ரத்து செய்ய உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும்.
சமுதாயத்தை பாதிக்கும் கடுமையான குற்றங்களில், உரிய காலக்கெடுவிற்குள் புலன் விசாரணை முடித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறுவதால் குற்றவாளிகள் எளிதில் ஜாமீன் பெற வழி வகை செய்கிறது. அதனை தடுத்திட, கடுமையான குற்ற வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி, புலன் விசாரணை செய்து, உரிய காலக் கெடுவுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதுடன் வழக்கு விசாரணையையும் விரைந்து முடிக்க காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும்.
ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் சாட்சிகளை கலைப்பது, மிரட்டுவது போன்ற சட்ட விதிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பட்சத்தில், காவல்துறையினர் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால் குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும்" என்று மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
