விக்கெட்டை இழக்கும் பெண் அமைச்சர் இவரா? விஐபி சந்திப்பு... உளவுத்துறையால் ஆட்டத்தை கலைக்கும் விஜய்?
சென்னை: அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சு தமிழக அரசியலில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சில அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், துறை மாற்றம் முதல் புதியவர்களுக்கு வாய்ப்பு வரை பல்வேறு மாற்றங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த முறை வெளியாகும் மாற்றப்பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்பதுதான் கோட்டை வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது...!!!
தமிழகத்தில் கடந்த மே மாதம் தவெக அரசு பொறுப்பேற்றது. முதலில் முதலமைச்சர் விஜய்யுடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். பிறகு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர்.

அமைச்சரவையில் மாற்றம்?
அமைச்சரவையில் ஒருவர் கூட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாக தெரிகிறது.. அதனால்தான் அமைச்சரவை கூட்டங்களிலும் இதை தொடர்ந்து வலியுறுத்தியபடியே உள்ளார்.. இப்போதுகூட, யாராக இருந்தாலும் சரி, புகார் உண்மையாயிருப்பின் அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சர்களை விஜய் எச்சரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, சில அமைச்சர்கள் மீது சோஷியல் மீடியாவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. சமீபத்தில் முடிவடைந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர்களின் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரிந்த நிலையில், சிலர் மீது விஜய்க்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல மின்வெட்டு, கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வு போன்ற விவகாரங்களும் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதாம்.. மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவமானம் நேர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட சில சம்பவங்களும் விஜய்யின் கவனத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உளவுத்துறை தந்த ரிப்போர்ட்
இப்படிப்பட்ட சூழலில் மக்களிடையே ஏற்படும் அதிருப்தியை குறைக்க நிர்வாக ரீதியாக மாற்றங்கள் தேவை என்ற ஆலோசனையும் விஜய்யிடம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.. அதனால்தான் ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகள் குறித்த விவரங்களையும் உளவுத்துறை லிஸ்ட் எடுத்து, அதை விரிவான அறிக்கையாகவே விஜய்யிடம் தந்துள்ளதாம்.
அந்த அறிக்கையில், அமைச்சர்கள் யாரை சந்திக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள், அவர்களால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்கள் தரப்பட்டுள்ளது.. மேலும், ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடு, பொதுவாழ்வில் அவர்களின் பிம்பம், துறை சார்ந்த முன்னேற்றம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட விரிவான ரிப்போர்ட் தயார் செய்து, அதையும் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு பெண் அமைச்சர் பதவி?
உளவுத்துறையின் அதிரடிகள் இப்படியிருக்க, மறுபக்கம், அமைச்சர் பதவியை இழக்கப் போவது யார் என்பது குறித்த அலசல்களும் அரசியல் களத்தில் வட்டமடிக்கின்றன.. அந்தவகையில், அமைச்சரவையில் உள்ள பெண் அமைச்சர்களில் ஒருவர், பதவியை இழக்க நேரிடலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவி வருகிறது.. இந்த பெண் அமைச்சர், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவராம்.
இதை கேள்விப்பட்ட சம்பந்தப்பட்ட பெண் அமைச்சர், தனது பதவியை தக்கவைத்துக் கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், முக்கிய விஐபி நபர்களை சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், சிறப்பாக செயல்பட்ட சில அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், புதிதாக சிலருக்கு அமைச்சரவையில் வாய்ப்பும் கிடைக்கலாம் என்கிறார்கள்..
ராஜ்மோகனுக்கு கூடுதல் பொறுப்பு?
இதில், ராஜ்மோகனிடம் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகள் உள்ள நிலையில், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள சில துறைகளின் பொறுப்புகளையும், ராஜ்மோகனிடம் முறைப்படி ஒப்படைப்பது குறித்தும் ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் தொடர்பான முக்கிய கோப்புகளில் இதுவரை முதலமைச்சர் நிலையிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு அந்தப் பொறுப்புகளை ராஜ்மோகனிடம் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறதாம்..
அதேசமயம், ராஜ்மோகன் வசமுள்ள சில கூடுதல் பொறுப்புகளை புதிய அமைச்சர்களுக்கோ அல்லது மற்ற அமைச்சர்களுக்கோ பகிர்ந்தளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இடைத்தேர்தல் முடிந்த பிறகு அமைச்சரவை மற்றும் துறைகளில் மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள்.. இதுபோன்ற மாற்றம் ஏற்பட்டால் சில அமைச்சர்களின் பொறுப்புகள் மாறுவதுடன், புதிதாக சில எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு கிடைக்ககூடும்.
கோட்டை எதிர்பார்ப்பு
அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அமைச்சரவை மாற்றம் குறித்து விஜய் தீவிரமாக ஆலோசித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், மேற்கண்ட தகவல்கள் அனைத்துமே ஸ்ட்ராங் யூகங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன..
எப்படிப்பார்த்தாலும், அமைச்சரவை மாற்றம், துறை ஒதுக்கீடு மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பு ஆகியவை தொடர்பாக ஓரிரு நாட்களில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு கோட்டை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!


Click it and Unblock the Notifications
