உளவுத்துறையின் "ஸ்பெஷல் டீம்" கையில் அந்த லிஸ்ட்.. தனுஷின் 234 தொகுதி திட்டத்தால் வந்த மாற்றம்
சென்னை: தமிழக அரசியல் என்றாலே ஏகப்பட்ட ட்விஸ்களுக்கும், சினிமா ஸ்டார்களின் அரசியல் அவதாரங்களுக்கும் பெயர் பெற்றது.. அந்த வகையில், இப்போது அறிவாலயத்தையும், கோட்டையையும் ஒரே நேரத்தில் உற்று நோக்க வைத்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த ஒரு வருடமாக, அமைதியாக காய்களை நகர்த்தி வந்த தனுஷ், இப்போது எடுத்திருக்கும் அதிரடிகள், தமிழக அரசியலின் வட்டாரங்களில் புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.
சமீபத்தில் நடந்த தன்னுடைய பிறந்த நாள் விழாவில், தனுஷ் ஸ்பெஷலான கொடியை அறிமுகப்படுத்தியிருந்தார்.. மேடையில் அவர் பேசிய பூடகமான வார்த்தைகளும் ஏதோ கேஷூவலான பேச்சுக்களாகவும் எடுத்துக் கொள்ள முடியாது.. அது கோட்டையை நோக்கி அவர் எடுத்து வைக்க போகும் அரசியல் பாதையின் முதற்புள்ளி என்று இப்போதுதான் அம்பலமாகி உள்ளது.

நடிகர் தனுஷ் அரசியல் பிளான்
நாமளும் அரசியல் பக்கம் கால் வைத்து பார்ப்போம் என்று ஏனோதானோ என்றில்லாமல், கனகச்சிதமாக திட்டமிட்டு இறங்கியிருக்கிறார் தனுஷ்.
கடந்த வாரம் பிரபல ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் வெளியிட்ட ஜாதகக் கணிப்பு, அரசியல் விவாதத்தில் கூடுதல் எண்ணெய்யை ஊற்றியிருந்தது..
தனுஷின் ஜாதகத்தை ஆய்வு செய்ததாக கூறும் அவர், தனுஷிற்கு அரசியலில் பிரகாசிப்பதற்கான உன்னதமான ராஜயோகம் வலுவாகவும், தனுஷ் அரசியலில் காலடி வைத்தால் மிக எளிதாக 2-வது இடத்தைப் பிடித்துப் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுப்பார் என்றும், எதிர்காலத் தமிழக அரசியல் களம் "விஜய் Vs தனுஷ்" என்ற நேரடிப் போட்டியாகவே மாறும் என்றும் கணித்திருந்தார். இதனால் தனுஷின் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.
234 தொகுதிகளிலும் ரசிகர் மன்றங்கள்
இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, இந்த ஆண்டுக்குள்ளேயே உறுப்பினர் சேர்க்கையை முடித்துவிட வேண்டும் என நிர்வாகிகளுக்கு கட் அண்ட் ரைட்டாக உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
அந்தவகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய மையமான கோவையின் 10 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை பணிகள் படுவேகமாகத் தொடங்கிவிட்டன. இளம் தலைமுறையினர் மத்தியில் தனுஷூக்குள்ள வெறித்தனமான கிரேஸை வைத்து, தொகுதி வாரியாக தனது நிஜமான "ஓட்டு வங்கி" எவ்வளவு என்பதையு கணக்கிடவே இந்த சீக்ரெட் வியூகம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
டிட்டோ தவெக
ஆனால், இங்குதான் ஒரு ட்விஸ்ட் உள்ளது.. இன்று முதலமைச்சராக அரியணையில் உட்கார்ந்திருக்கும் விஜய், ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தனது மக்கள் இயக்கம் மூலம் என்னவெல்லாம் செய்தாரோ... டிட்டோ அதே பாணியைத்தான் தனுஷும் காப்பி-பேஸ்ட் செய்திருக்கிறாராம்.. அதாவது கல்வி உதவித்தொகை, குருதிதான முகாம்கள், இலவச மருத்துவ முகாம்கள், அன்னதானம் என அடித்தட்டு மக்களை சென்றடையும் நற்பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சுருக்கமாக சொன்னால், மக்களின் மனதில் இடம்பிடித்து, அதை அப்படியே வாக்கு அரசியலாக தவெக மாற்றியதை போல, தனுஷும் இதே ரூட்டை கையில் எடுத்துள்ளாராம். அதனால்தான், தனுஷின் ஒவ்வொரு நகர்வும், ஆளுங்கட்சியான தவெகவின் கவனத்தை பெற்று வருகிறது. இதனால் ஆட்சியாளர்கள், அடுத்தகட்ட நடவடிக்கையிலும் இறங்கிவிட்டதாக தகவல்கள் கசிகின்றன.
உளவுத்துறை கையில் லிஸ்ட்
இப்படி, தனுஷின் இந்த சத்தமில்லாத மூவ்கள், வருங்காலத்தில் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கக்கூடும் என்பதால், அவரது செயல்பாடுகளை உற்று கண்காணிக்க உளவுத்துறைக்கும் உத்தரவு பறந்துள்ளதாம்.
இதற்காகவே உளவுத்துறையில் ஒரு ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டு, தனுஷ் மற்றும் அவரது மன்ற நிர்வாகிகளின் அன்றாட நடவடிக்கைகள், மாவட்ட வாரியான கூட்டங்கள், தொகுதி அளவிலான ஒருங்கிணைப்புகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு தலைமையகத்திற்கு அறிக்கையாக செல்கிறதாம்.
ஜெகதீஷ் அதிரடி
அதுமட்டுமல்லாமல், முதலமைச்சரின் தனிச்செயலாளர் ஜெகதீஷின் நேரடி பார்வையில், தனுஷ் சார்ந்த அமைப்புகளின் களப்பணிகள் மற்றும் அவர்களது சோஷியல் மீடியா செயல்பாடுகள் அணு அணுவாக கண்காணிப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள் உளவுத்துறை வட்டாரத்தினர்.
சினிமாவில் டாப்பில் இருக்கும்போதே, அரசியல் அரியணைக்கு காய் நகர்த்தும் தனுஷின் இந்த சைலன்ட் அட்டாக், வரப்போகும் நாட்களில் தமிழக அரசியல் சதுரங்கத்தில் எந்த மாதிரியான புயலைக் கிளப்பப் போகிறதோ தெரியவில்லை... பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!


Click it and Unblock the Notifications
