என்னதான் உருகினாலும் ஜி.கே.மணி சமரசம் பேசுறது அன்புமணிக்கு பிடிக்கலையாமே! இதுதான் காரணமா?
சென்னை: பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே நடக்கும் மோதலுக்கு ஜி.கே.மணி வந்து சமாதானம் செய்வதை அன்புமணி ராமதாஸ் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு 2026 தமிழக சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் பாமகவில் நடக்கும் மோதல் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் கட்சியினர் கலங்கியுள்ளனர்.
பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணியின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அன்புமணி ராமதாஸ் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஜி.கே.மணி கவுரவத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அன்புமணி, பாமக தலைவரானதால், இளைஞரணி தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கு ராமதாஸ், அவரது மகள் வழி பேரன் முகுந்தனை நியமித்தார். ஆனால் இதை பொது மேடையிலேயே அன்புமணி கண்டித்தார்.
4 மாதங்கள்
"கட்சியில் சேர்ந்த 4 மாதத்தில் இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுக்க வேண்டுமா " என்றும் அன்புமணி கேள்வி எழுப்பினார். அப்போது ராமதாஸ் மிகவும் கடுமையாக பேசினார், "இது என் கட்சி, விருப்பமில்லாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம்" என தெரிவித்திருந்தார்.
தந்தை-மகன்
இதன் மூலம் ஏற்கெனவே தந்தை-மகன் இடையே புகைந்திருந்த பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து 2024 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என கூறியும் பாமக தலைவர் என்ற முறையில் அன்புமணி, கூட்டணி வைத்தார். இதனால் பாமக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
2026 தமிழக தேர்தல்
இந்த கோபம் ராமதாஸுக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கும் பாஜகவுடன் கூட்டணி செல்லலாம் என அன்புமணி முடிவு செய்திருந்ததை உணர்ந்த ராமதாஸ், தடாலடியாக பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிவிட்டு செயல் தலைவராக்கினார்.
பாமக நிறுவனர்
மேலும் பாமகவின் நிறுவனரும் நானே கட்சித் தலைவரும் நானே என அறிவித்திருந்தார். இது அன்புமணி ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்தது. ராமதாஸுக்கு எதிராக அன்புமணி ஆதரவாளர்கள் திரண்டனர். இந்த நிலையில் தனது செல்வாக்கை நிரூபிக்க விரும்பிய ராமதாஸ், 5 ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.
பிசுபிசுத்த கூட்டம்
ஆனால் அவை ஐந்துமே பிசுபிசுத்து போனது. இதனால் இனி அன்புமணிதான் எல்லாம் என்ற தோற்றத்தை வெளிப்படுத்தியது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அது போல் ஒரு கட்சிக்குள் இரு முக்கிய தலைவர்கள் அடித்துக் கொண்டால் அது வரும் 2026 தேர்தலில் எதிரொலிக்கும் என்ற அச்சம் பாமக நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது.
ராமதாஸ் சமாதானம்
இதனால் ஜி.கே.மணி உள்ளிட்டோர் அன்புமணியையும் ராமதாஸையும் சமாதானம் செய்து வருகிறார்கள். ஆனால் ஜி.கே.மணி தன்னை சமாதானம் செய்வது அன்புமணிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
ஜி.கே.மணி உருக்கம்
இத்தனைக்கும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் மோதலுக்கு காரணமே ஜி.கே.மணிதான் என அன்புமணி நம்புகிறார். இது போல் தன்னை கூறுவது, தன்னை கத்தியால் குத்தி கொலை செய்வதற்கு சமம் என ஜி.கே.மணி உருக்கமாக தெரிவித்திருந்தார். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும் அதை எல்லாம் விட்டுவிட்டு பாமகவில் இருக்கிறேன், அது ஏன் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் ஜி.கே.மணி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications