நம்ம சென்னை நம்ம மெரினா! சர்வதேச கடற்கரை தூய்மை தினம்! சென்னை கடற்கரைகளில் குவிந்த தன்னார்வலர்கள்!
சென்னை: சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி, சென்னை மெரினா முதல் கோவளம் வரை உள்ள கடற்கரைப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது. இதில், பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கடலின் சுற்றுச்சூழலில் மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவது பிளாஸ்டிக் குப்பைகள்தான். இது ஒரு சர்வதேச பிரச்சனையாகவும் உருவெடுத்து வருகிறது.
மேலும், கடற்கரை ஒட்டிய பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகள், அதிக அளவில் கடலில் சென்று சேருவதால், கடல் சூழலை பாதிப்படைய செய்கிறது. மேலும், பிளாஸ்டி உள்ளிட்ட குப்பைகளால், கடல்வாழ் உயிரினங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

ஐ.நா.வில் இந்தியா ஒப்பந்தம்
ஐக்கிய நாடுகளின் சுத்தமான கடற்கரை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதனையடுத்து, கடல் தூய்மை பிரச்சாரத்தில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின்படி, பல பணிகள் பல்வேறு கட்டங்களாக ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், கடலிலும், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மாசுபாடு ஏற்படாமல் தடுக்க முடியும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை
நிலப்பகுதியில் மாசுபாடுகளை குறைத்தாலே கடலில் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் கலப்பதை தடுக்க முடியும். இதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாகதான், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை, மத்திய அரசு அதிரடியாக தடை செய்துள்ளது. இருப்பினும் அவை வெளிப்படையாகவே பயன்பாட்டில் உள்ளன. இதனால் கடற்கரையில் குப்பைகள் தேங்கி, கடல் பகுதியை மாசுப்படுத்துகிறது.

சர்வதேச கடற்கரை துய்மை தினம்
சர்வதேச அளவில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் தினம், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 3-வது சனிக்கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, இந்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து கடற்கரை பகுதிகளை சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. 'தூய்மையான கடல் பாதுகாப்பான கடல்' என்ற விழிப்புணர்வு முழக்கத்துடன் இந்தியாவில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் சுத்தப்படுத்த முடிவு செய்யப்பட்டன.

சென்னை கடற்கரைகளில் சுத்தம்
அதன்படி, சர்வதேச அளவில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் தினமான இன்று, தன்னார்வ அமைப்பும், மத்திய அரசு நிறுவனங்களும் இணைந்து சென்னையில் உள்ள கடற்பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியை இன்று மேற்கொண்டனர். சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் வரை உள்ள கடற்கரைப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணி, காலை 6 மணி முதல் 9 வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

பல்வேறு தரப்பினரும் ஆர்வம்
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி நடைபெற்ற கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில், சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதேபோல், கார்ப்பரேட் ஊழியர்கள், என்.ஜி.ஓ., என்.எஸ்.எஸ்., என்.சி.சி., லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என 10 ஆயிரம் தன்னார்வலர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு, கடற்கரையை சுத்தப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications