வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி
சென்னை: சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திக் மோகன் போட்டியிடுகிறார். இவர் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட நல்வாழ்வு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு, முதல்வன் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, அவரது கணவர் சபரீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தகூட்டத்தில் சபரீசன் பேசும் போது, வில்லிவாக்கத்தில் போட்டியிடும் கார்த்திக் என் நண்பர்.. நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள் என பேசினார்.
சென்னையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது. அதிமுக பாஜக கூட்டணியை ஒயிட்வாஸ் செய்திருந்தது திமுக. பொதுவாக சென்னையில் திமுகவிற்கு பலம் அதிகம். எம்ஜிஆர் காலத்திலேயே திமுகவின் கோட்டையாக சென்னை இருந்துள்ளது. குறிப்பாக வட சென்னையில் திமுகவிற்கு செல்வாக்கு மிக அதிகம். வில்லிவாக்கம், பெரம்பூர், கொளத்தூர், போன்ற தொகுதிகள் திமுகவிற்கே வெற்றியை தேடித்தந்த தொகுதிகள்.

இதில் வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திக் மோகன் போட்டியிடுகிறார். இங்கு தவெக சார்பில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் விஜயகுமார் போட்டியிடுகிறார். மூன்று பேருமே வில்லிவாக்கம் தொகுதி முழுவதும் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொகுதிக்கு பக்கத்து தொகுதி தான் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி.. வில்லிவாக்கம் தொகுதியில் திமுகவினர் மிகத்தீவிரமாக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட நல்வாழ்வு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று திமுக சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரையும் அவரது கணவர் சபரீசனும் கலந்து கொண்டனர்.
அப்போது சபரீசன் பேசுகையில், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் கார்த்திக் என்னுடைய நண்பர்.. இங்கு நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. அவரை வெற்றி பெறச் செய்தால், உங்கள் தொகுதிக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் அவர் செய்து கொடுப்பார்.. அதற்கு நான் கியாரன்டி என வாக்குறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சபரீசன், நாங்கள் (திமுக) எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். எனவே மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தல் களத்தைச் சந்தித்துள்ளோம். தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு சிறப்பாக இருக்கிறது. மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் அமையும். 100 சதவீதம் தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 2 தொகுதிகளில் போட்டியிடுவது என்பது அந்தத் தலைவரின் தன்னம்பிக்கையின்மையைக் காட்டுகிறது" என்று சபரீசன் கூறினார். இந்தத் தேர்தலில் சபரீசன் நேரடி அரசியல் களத்தில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications