அண்ணாமலையை கார்னர் செய்கிறதா அதிமுக? விரிசல் ஆரம்பித்துவிட்டதா? வெடிக்கும் பாஜகவினர்
அதிமுக தலைமை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடன் மோதலை கடைபிடிக்கிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
சென்னை: பிரதமர் மோடியுடன் நல்லுறவு வைத்திருக்கும் அதிமுக தலைமை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடன் மோதலை கடைபிடிக்கிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. நிர்மல்குமார் விவகாரத்தில் அமர்பிரசாத் ரெட்டி நேரடியாகவே அதிமுக தலைமையை கண்டித்து ட்விட்டும் போட்டார். இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் நிர்மல்குமார் தலைமையில் ஏராளமான பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர். பாஜகவின் ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி அதிமுகவில் இன்று இணைந்துள்ளார்.
அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்த பல்வேறு நிர்வாகிகள் இணைந்துள்ளதால் பாஜக தலைமைக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாலாண்டு 420க்கள்
இதனிடையே பாஜக நிர்வாகிகள் விலகல் குறித்து அண்ணாமலைக்கு நெருக்கமானவராக கருதப்படும் அமர்பிரசாத் ரெட்டி ட்விட்டரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சாடுவது போல் பதிவிட்டுள்ளார். அதில், "கூட்டணிக் கட்சியான அதிமுக இம்மாதிரியான செயலை செய்திருக்கக் கூடாது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை. நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கட்சி மாறிய கொள்கையற்ற பிழைப்புவாதிகளை வைத்து அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?

கனவை மறந்துவிடுங்கள்
கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக கருதிய அதிமுகவினருக்கு கொங்கு மண்டல வாக்காளர்கள் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர். 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றது மீண்டு எழுவதற்கான அறிகுறி இல்லை. கோட்டையை பிடிப்பதற்கான கனவை மறந்து விடுங்கள். அண்ணாமலை தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் பாஜக தான் தமிழகத்தின் எதிர்காலம் " இவ்வாறு அமர்பிரசாத் ரெட்டி கூறியிருந்தார்.

கூட்டணியில் விரிசலா
இந்த ட்வீட் காரணாக அதிமுக பாஜக இடையே மோதல் நிலவுகிறதா? பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் பாஜகவிற்கும் செல்வதும், பாஜக நிர்வாகிகள் அதிமுகவிற்கு செல்வதும் அடிக்கடி நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அண்மைக்காலத்தில் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு நயினார் நாகேந்திரன், சசிகலா புஷ்பா, ராதாரவி, நீலாங்கரை முனுசாமி, வேலூர் முன்னாள் மேயர் கார்த்திகாயிணி உள்பட பல நிர்வாகிகள் சென்றார்கள். அதேபோல் பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ சரவணன், ஐடி விங்க் தலைவர் நிர்மல்குமார் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர். இதில் நிர்மல்குமார் இணைந்த விவகாரத்தில் பிரச்சனை வெடித்திருக்கிறது. அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துவிட்டு நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்துள்ளார். இதுவே பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக பாஜக இடையே உறவில் விரிசல் ஏற்பாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் விமர்சகர்
இதுபற்றி அரசியல் விமர்சகர் ஜேவிசி ஸ்ரீராம் பிரபல தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "அதிமுகு பாஜக இடையே மோதல் ஏற்பட்டதாக நான் சொல்ல மாட்டேன். ஆனால் உடனடியாக சரிசெய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதிகவில் இருந்து பாஜகவிற்கு, பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு செல்வது இதெல்லாம் தமிழ்நாட்டு அரசியலில் புதிதல்ல. ஆனால் நிர்மல்குமார் பாஜக மீது விமர்சனம் செய்துவிட்டு வெளியே வந்தார். ஆனால் அதிமுகவில் இருந்து விலகிய நயினார் நாகேந்திரன் பெரிதாக அதிமுக மீது விமர்சனம் சொல்லி வெளியே வரவில்லை. இதேபோல் திமுகவில் இருந்து பாஜகவிற்கு வந்த விபி துரைசாமியும் பெரிதாக எந்த குற்றச்சாட்டும் சொல்லவில்லை. நான் தேசிய வாதத்தை நம்புகிறேன். மோடியின் கரத்தை வலுப்படுத்துவேன் என்றார்.

கூட்டணிக்கு ஆபத்து
ஆனால் நிர்மல்குமார் அப்படியல்ல பாஜக தலைவர் மீது விமர்சனத்தை வைத்துவிட்டு சென்றுள்ளார். இப்போது கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவினர் வைக்கும் விமர்சனங்களை பார்க்கும் போது அதிமுக கோமாளிகள் கைக்கு போய்விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது . இதில்எடப்பாடி பழனிசாமி பாஜகவை உறவை விரும்பபுவர். அவர் அப்படி செய்யக்கூடியவர் அல்ல. ஆனால் சில அரசியல் கோமாளிகள் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூபில் அண்ணாமலை பற்றி மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் சொல்லித்தான் சிடி நிர்மல்குமார் இப்படி பேசிட்டு சென்றுளளார். எனவே இப்படிப்பட்டவர்கள் கையில் அதிமுக இருக்கிறது என்றால் கூட்டணிக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications