கைவசம் செம பாயிண்ட்.. ஓபிஎஸ்சை பகைத்தால் என்னவாகும் தெரியுமா.. பிளவை நோக்கி அதிமுக?
சென்னை: கடந்த 2 நாட்களாக அதிமுகவில் அரங்கேறி வரும் நிகழ்வுகளை பார்த்தால் அக்கட்சி பிளவை நோக்கிச் சென்றுவிடுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
கட்சியின் சட்டதிட்ட விதிகள், இதற்கு முன் தொடரப்பட்டுள்ள வழக்குகள் என எதையும் கருத்தில் கொள்ளாமல் ஒற்றைத் தலைமை வேண்டும் என ஆளாளுக்கு கோஷம் எழுப்புவதால் அது கட்சியின் சின்னத்திற்கே ஆபத்தை விளைவித்துவிடுமோ என அஞ்சப்படுகிறது.
கட்சியின் பெயர் மற்றும் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தின் பயன்பாட்டு உரிமை மதுசூதணன் வகையறாக்களுக்கு தான் என 2017-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

பிளவை நோக்கி
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை கோஷத்தால் தமிழக அரசியல் வட்டாரம் பரபரத்துக் காணப்படுகிறது. அதிமுகவில் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரை கடந்து மாற்றுக்கட்சியினர் மத்தியிலும் அதிகரித்துள்ளது. அதிமுகவுக்கு நான் தான் பொதுச்செயலாளர் என ஏற்கனவே சசிகலா ஒருபக்கம் கூறிவரும் நிலையில், இப்போது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் நான் தான் பொதுச்செயலாளர் என ஈகோ யுத்தம் நடத்த தொடங்கியுள்ளனர்.

மதுசூதணன் வகையறா
அதிமுகவில் ஒற்றைத் தலைமை அமைவது சாத்தியமா எனப் பார்த்தால், தற்போதைய சூழலில் அது சற்று கடினம் என்பது தான் யதார்த்தம். ஏனெனில் 2017-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் மதுசூதணன், செம்மலை, ஓபிஎஸ், ஆகிய மூவரை உள்ளடக்கிய வகையறாக்களுக்கு தான் அதிமுகவின் பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தின் பயன்பாட்டு உரிமையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி பார்த்தால் மதுசூதணன் இன்று உயிருடன் இல்லை. மீதமிருக்கும் செம்மலையும், ஓபிஎஸ் சும் அவ்வளவு எளிதாக தங்கள் கைகளில் உள்ள லகானை இபிஎஸ்க்கு விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.

சட்ட நுணுக்கங்கள்
ஏற்கனவே ராஜ்யசபா சீட் கொடுக்காததால் இபிஎஸ் மீது ஏக அதிருப்தியில் இருந்து வருகிறார் செம்மலை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருமே எடப்பாடி பழனிசாமி மீது கடும் அப்செட்டில் இருக்கிறார். சரிக்கு சரியாக போட்டி என வந்துவிட்டால் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஒபிஎஸ்சும், செம்மலையும் பொதுக்குழுவுக்கே தடை வாங்கினாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இதனால் இந்த விவகாரத்தில் சட்ட நுணுக்கங்களை அலசி ஆராய்ந்து வருகிறது இரண்டு தரப்பும்.

நீயா? நானா?
ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்வதை தவிர எடப்பாடி பழனிசாமிக்கு தற்போதைய சூழலில் வேறு வழியில்லை. ஒரு வேளை அவர் சமாதானம் செய்ய மறுத்து நானா நீயா என பார்த்துக் கொள்வோம் என விட்டுவிட்டால் அது கட்சியின் பெயருக்கும், சின்னத்துக்கும் ஆபத்தை உருவாக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகும். இதனை அதிமுக தொண்டர்கள் இம்மியளவும் ரசிக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து இந்த விவகாரத்தில் இரு தரப்பும் முடிவெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications