எகிறும் மவுசு.. இந்த தடவை 10க்கும் மேலே வேணும்.. ராகுலால் காங். போடும் கணக்கு! உற்று பார்க்கும் திமுக?
சென்னை: சமீப நாட்களாக தேசிய அரசியலில் நடக்கும் சில சம்பவங்களால் காங்கிரஸ் கட்சியின் மவுசு திடீரென உயர்ந்துவிட்டதாக அந்த கட்சி நிர்வாகிகள் நம்புகிறார்களாம். தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையில் இது எதிரொலிக்கும் என்கிறார்கள்.
காங்கிரஸ் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. கர்நாடகாவில் 2019 தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி மோடி என்ற பெயரை பயன்படுத்தி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்துள்ளார். இனி அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டதாகவும், வயநாடு தொகுதி காலி ஆகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

போராட்டம்
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. நேற்று இந்தியா முழுக்க அஹிம்சா போராட்டத்தை காங்கிரஸ் மேற்கொண்டது, அதோடு தமிழ்நாட்டிலும் தீவிரமாக நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. டெல்லியில் காந்தி நினைவிடம் இருக்கும் ராஜ்காட் பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கே போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 144 தடை உத்தரவும் போடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றம் சட்டசபை
இன்னொரு பக்கம் இன்று சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் ராகுல் காந்தி விவகாரம் பற்றி பேச அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் ராகுல் தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் காரணமாக லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்ட நிலையில், அங்கு பணிகள் முடங்கின. ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் காட்டமாக முழக்கம் செய்தனர். இதனால் லோக்சபா, ராஜ்யசபா தொடங்கிய 4 வினாடிகளிலேயே மாலை 4 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 2 நாட்கள் விடுமுறைக்கு பின் கூடிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கிய உடனே முடங்கின. இன்னொரு பக்கம் ராஜ்ய சபா தொடங்கிய ஒரு நிமிடத்தில் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அவைகள் ஒத்திவைப்பு
இப்படி ராகுல் காந்தி விவகாரம் தீவிரம் அடைந்து உள்ள நிலையில் மீண்டும் ராகுல் காந்தி vs மோடி என்ற அரசியல் மோதல் தொடங்கி உள்ளது. தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது அணி உருவாகும் சூழ்நிலைகள் நிலவிய நிலையில்தான் மீண்டும் ராகுல் vs மோடி என்ற அரசியல் மோதல் வலுப்பெற்று உள்ளது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஏற்கனவே பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில்தான் தற்போதில்லை இந்த விவகாரமும் காங்கிரசுக்கு பெரிய பூஸ்ட் கொடுத்துள்ளது. இந்த நிலையில்தான் சமீப நாட்களாக நடக்கும் சம்பவங்களால் காங்கிரஸ் கட்சியின் மவுசு திடீரென உயர்ந்துவிட்டதாக அந்த கட்சி நிர்வாகிகள் நம்புகிறார்களாம். தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையில் இது எதிரொலிக்கும் என்கிறார்கள்.

கூட்டணி
இது தொடர்பாக நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர்.. காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் ஆதரவு பெருகி உள்ளது. எங்களை எதிர்பதற்காகவே கட்சி தொடங்கியவர்கள் கூட இப்போது ராகுல் காந்தி விவகாரத்தில் எங்களை ஆதரிக்கிறார்கள். நாங்கள் இதை நல்ல வாய்ப்பாக பார்க்கிறோம். தமிழ்நாட்டில் ஏற்கனவே ராகுல் காந்திக்கு நல்ல ஆதரவு உள்ளது. தற்போது நடக்கும் சம்பவங்களால் அந்த ஆதரவு மேலும் பெருகி உள்ளது.

ராகுல் காந்தி
இதை பயன்படுத்தி லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் நிற்கும். அதிக இடங்களில் போட்டியிட நாங்கள் முடிவு செய்வோம். கடந்த முறை தமிழ்நாட்டில் 10 இடங்களை பெற்றோம். இந்த முறையோ அதைவிட அதிக இடங்களை பெற்று லோக்சபா செல்வோம். கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் அதிக இடங்களில் போட்டியிடுவோம், என்று நம்பிக்கையாக தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி விவகாரம் தங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்று காங்கிரஸ் நம்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரசின் இந்த பிளானை திமுகவும் தீவிரமாக உற்றுநோக்கி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications