பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு கலப்பா?.. போட்டுடைத்த அறநிலையத் துறை
சென்னை: திருப்பதி கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு கலக்கப்படுவதாகப் புகார் எழுந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதாகவும், புனிதமான திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்தியதாகவும் வைத்த குற்றச்சாட்டு கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இந்தக் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. அதோடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்பா ரெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதம் மற்றும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையை சந்திரபாபு நாயுடு காயப்படுத்தி உள்ளார். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியவுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யை சோதனை செய்யப்பட்டதில், மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை லட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் திருப்பதியில் வழங்கப்படும் லட்டை பரிசதோனை செய்து தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்கள் புனிதமாகக் கருதும் கோவில் பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது குறித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருப்பதிக்கு நெய் சப்ளை செய்யும் அதே ஏஆர் புட்ஸ் நிறுவனம்தான் பழனி முருகன் கோயிலுக்கும் நெய் சப்ளை செய்து வருகிறது. திமுக நியமித்த இந்த நிறுவனம் பொறுப்பேற்ற பிறகுதான் பழனி பஞ்சாமிர்தத்தின் தரம் கெட்டுப் போயுள்ளதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து, தமிழக பாஜக தொழிற் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தப் பதிவில், திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யபட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்னி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற உத்தமர் ராஜசேகர்தான் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இப்படிபட்ட ஒரு நல்லவரைதான் பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமித்துள்ளது சனாதன ஒழிப்பு திமுக அரசு.
ஆந்திராவின் பெருமை திருப்பதி. தமிழகத்தின் பெருமை பழனி. ஒரே சமயத்தில் இரண்டு கோவில்களிலும் ஒரே நபர். கடந்த 2022ம் ஆண்டு திமுக நியமித்த புதிய அறங்காவலர் பொறுப்பேற்ற பிறகுதான் பழனி பஞ்சாமிர்தத்தின் தரம் கெட்டு போயுள்ளது. பல முறை குற்றச்சாட்டுகள் வந்த பிறகும், அறங்காவலர் குழு மழுப்பலாக பதில் சொல்லி வருவது யாரை காப்பாற்ற?. பழனி பஞ்சாமிர்தம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சப்ளை செய்யப்படும் நெய்யை பரிசோதனை செய்தால் உண்மை தெரியவரும்" என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஏஆர் டெய்ரி ஃபுட் பிரைவேட் லிமிட்டெட் உரிமையாளர் ராஜசேகர் பழனி அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்து வந்தார். பழனி முருகன் மாநாட்டிற்கு முன்பு பதிவுக் காலம் முடிந்து அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது. மேலும், பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க ஆவினில் இருந்து மட்டுமே நெய் வாங்கப்பட்டு வருகிறது என்று இந்து அறநிலையத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications