காரணமே வேற.. "ஹிந்தி"யில் திமுகவின் அறிக்கை.. "அது வேற, இது வேற".. அட்டாக் செய்த நடிகை.. என்னாச்சு
நடிகை கஸ்தூரி திமுகவின் அறிக்கை குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: அம்பேத்கர் குறித்து முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை, இந்தி மொழியில் தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.. இதுதான் தற்போது விவாதமாகவும், சர்ச்சையாகவும் வெடித்துள்ளது..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்துவருகிறது. அந்த வகையில் கடந்த 13-ம் தேதி நடந்த பேரவை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருந்தார்.
அதற்கு முந்தைய நாள்தான், மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது..

அம்பேத்கர்
இந்த கூட்டத்தில், அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணலுடைய முழுஅளவு வெண்கலச்சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்வைத்திருந்தார்.. அதேபோல, பெரியார் பிறந்தநாளை 'சமூகநீதி நாளாக' அறிவித்தது போல் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதியை 'சமத்துவ நாள்' என்று கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

ஸ்டாலின் பேச்சு
இந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுதான், சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். ''அண்ணல் அம்பேத்கர் வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியர். அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும். அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்படும்'' என அறிவித்திருந்தார்.

அம்பேத்கர்
பிறகு முதல்வர் ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.. அதில், இன்று கொண்டாடப்படும் சமத்துவ நாள் விழாவையொட்டி திமுக மாவட்ட அலுவலகங்களில், அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திட வேண்டும்.. தமிழ்நாட்டில் உள்ள 238 சமத்துவபுரங்களிலும் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலையை முன்பு புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவப்படத்தை வைத்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி சமத்துவ நாளைக் கொண்டாடிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

விசிக
இதற்கு விசிக உட்பட பல்வேறு கட்சிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொண்டன.. திருமாவளவன், தன்னுடைய எம்எல்ஏக்களை அழைத்து கொண்டு நேரடியாகவே முதல்வரை சென்று சந்தித்து வாழ்த்தும், நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.. இதனிடையே, சட்டப்பேரவையில், அம்பேத்கர் குறித்து பேசியவை இந்தி மொழியில் தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.. இந்த ஹிந்தி அறிக்கையை வைத்துதான் சிலர் விமர்சனங்களையும், கேள்விகளையும் திமுக மீது வைத்து வருகின்றனர்.

கஸ்தூரி
அந்த வகையில், நடிகை கஸ்தூரி இந்த ஹிந்தி அறிக்கையை தன்னுடைய ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.. "இன்று முதல் அமைச்சர் அம்பேத்கர் குறித்து பேசியவை இந்தி மொழியில் தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது" என்ற வரிகளுக்கு "இது வேற, அது வேற என்று பதிவிட்டுள்ளார்.. அதாவது இந்திக்கு எதிர்ப்பை காட்டி வரும் திமுக, தற்போது ஹிந்தியிலேயே அறிக்கை வெளியிட்டுள்ளதே என்பதை தான் இப்படி மறைமுகமாக சுட்டிக் காட்டி உள்ளதாக தெரிகிறது.

ஹிந்தி மொழி
ஆனால், இதற்கும் பலர் விளக்கம் தந்து வருகிறார்கள்.. ஹிந்திக்காரங்களுக்கு தெரியனும்னா ஹிந்தியில் தான் கொடுக்கனும் அவனிடம் தமிழை திணிக்க முடியாது.. கூடாது... இதான் திராவிட அரசியல் யார்மீதும் எதையும் திணிக்க கூடாது என்பதுதான் என கஸ்தூரி ட்வீட்டுக்கு பதிலடி வருகின்றனர்.. மேலும் சிலர், ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டிருக்கலாமே? அதுதானே இணைப்பு மொழி? என்று கேட்டுள்ளனர்.

இந்தி மொழி
சமீபகாலமாகவே, சில முக்கிய அறிவிப்புகள், தகவல்கள் ஹிந்தியிலும் வெளியாகி வருகின்றன.. அவ்வளவு ஏன்? முதல்வர் ஸ்டாலின் எழுதிய, 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை, ஹிந்தியிலும் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாக செய்திகள் கசிந்தன.. இதற்கு காரணமும் உள்ளது.. இந்த புத்தகத்தை பொறுத்தவரை ஸ்டாலின் மிசாவில் கைதானது முதல், சென்னை மேயரானது, துணை முதல்வரானது, பிறகு முதல்வரானது வரை அத்தனை தகவல்களும் திரட்டி தரப்பட்டுள்ளது.

ஹிந்தி அறிக்கை
இதுவரை தமிழக நலன்களை பெற்றுத்தர, சமூகநீதி காக்க, ஸ்டாலின் மேற்கொண்ட போராட்டங்கள் அடங்கிய வீடியோக்களும் ஹிந்தியில் ரெடியாகி கொண்டிருப்பதாக கூறப்பட்டுது.. இவையெல்லாம் வெளிவந்தால், வடமாநிலங்களிலும் ஸ்டாலின் யார் என்பது தெரியவரும் என்று திமுக தரப்பில் உறுதியாக நம்ப்படுகிறது.. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அருமை பெருமைகளை வடமாநில மக்கள் அறிய முடியும் என்று நம்பப்படுகிறது.. நேற்றைய அம்பேத்கர் குறித்த அறிவிப்பும் கிட்டத்தட்ட அப்படித்தான்..

அம்பேத்கர்
அம்பேத்கர் என்பவர் இந்தியாவுக்கு பொதுவான தலைவர்.. நம் தமிழகத்தில் அவர் பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அங்குள்ள மக்களுக்கும் தெரிய வேண்டும், தெரியப்படுத்த வேண்டும் என்பதற்கவே ஹிந்தியில் மொழிபெயர்த்து தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.. மற்றபடி இந்தி திணிப்பு என்ற விஷயத்தில் திமுக தற்போது வரை உடும்பு பிடியாக இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்..!












Click it and Unblock the Notifications