மாண்புமிகு அமைச்சர் ரவீந்திரநாத் குமார்! ஓபிஎஸ்க்கு எடப்பாடி கொடுத்த மெகா ஆஃபர்! ஆனால் ஒரு சிக்கல்?
சென்னை : அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாகவும், ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என ஓபிஎஸ் கேட்ட நிலையில் அதையும் வழங்குவதாக எடப்பாடி தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான தங்கமணி கூறியிருக்கிறார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என ஒரு நீதிபதி அமர்வு தீர்ப்பளித்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு உற்சாகம் அடைந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்தார்.
அந்த தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உற்சாகமடைந்தனர். இருந்தும் விடாத ஓ.பன்னீர்செல்வம் இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம்
இந்த வழக்கின் தீர்ப்பை பொருத்தே ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் குறித்து தீர்க்கமான முடிவுகள் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்குள் வலுவான அணி ஒன்றை திரட்டும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவில் கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது குறித்து தொண்டர்களிடையே வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் முன்னாள் அமைச்சரான தங்கமணி.

நாமக்கல் தங்கமணி
நாமக்கல் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. அதிமுக அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஓ பி எஸ்சை அரவனைத்தார்.

பிரச்சினை
சட்ட மன்ற தேர்தல் நேரத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் எனப் பிரச்சினை செய்தார். முதல்வர் வேட்பாளர் தேர்விலும் 10 நாட்கள் பிரச்சினை நீடித்தது. முதல்வராகச் சிறப்பாகப் பணி புரிந்த நிலையில் வேண்டா வெறுப்பாகத் தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தான் ஒற்றத் தலைமை வேண்டும், எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என அனைவரும் தெரிவித்தனர்.

அமைச்சர் பதவி
ஓபிஎஸ் அவர்கள் ஏற்க மறுத்து விட்டார். இருந்தபோதிலும் மரியாதைக் குறைவாக நடந்து விடக்கூடாது என்பதற்காக ஓபிஎஸ் அவர்களுக்குக் கட்சியின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி கூறினார். ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார், அதையும் வழங்குவதாக எடப்பாடி தெரிவித்தார்" என பேசியிருக்கிறார். இதன் மூலம் அதிமுகவில் தனக்கு அடுத்த இடத்தில் ஓபிஎஸ்ஸை வைக்க எடப்பாடி தயாராக இருந்தும் அதனை ஏற்றுக் கொள்ளாத ஓபிஎஸ் தனக்கும் தனது மகனுக்கும் உரிய பதவி கிடைக்க வேண்டுமென்பதில் மட்டும் தான் குறியாக இருந்தார் என்கின்றனர் எடப்பாடி ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications