அதிமுகவுக்கு தாவிய திமுக மாநில நிர்வாகி? திடீரென பரவிய தகவல்.. பதறிப்போன ஆஸ்டின்! உடனே மறுப்பு!
சென்னை: முன்னாள் எம்.பியும், திமுக துணை அமைப்புச் செயலாளருமான ஆஸ்டின், இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்ததாக திடீரென தகவல் பரவியது. இந்த தகவலுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார் ஆஸ்டின்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆஸ்டின், அதிமுகவில் இருந்தபோது ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்தார். அதன்பிறகு 1997-ல் திருநாவுக்கரசர் தொடங்கிய எம்.ஜி.ஆர். அதிமுகவில் சேர்ந்தார். 2001-ல் நடந்த தேர்தலில் நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். திருநாவுக்கரசர் கட்சியை கலைத்து விட்டு பாஜகவுக்கு சென்றதால் ஆஸ்டின் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

அதன்பிறகு, 2006 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அதிமுகவில் சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். சுயேட்சையாக போட்டியிட்டு 2ஆம் இடம் பிடித்தார். பின்னர், விஜயகாந்த் தொடங்கிய தேமுதிகவில் இணைந்து பணியாற்றி வந்தார் ஆஸ்டின். தேமுதிகவில் ஆஸ்டினுக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது.
எனினும், கட்சியில் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என அதிருப்தியில் இருந்து வந்த ஆஸ்டின், கடந்த 2013ஆம் ஆண்டு தேமுதிகவில் இருந்து விலகி கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்தனர்.
2016 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஆஸ்டின். 2021ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட நிலையில், தளவாய் சுந்தரத்திடம் தோல்வியைத் தழுவினார் ஆஸ்டின்.
திமுகவில் தற்போது தலைமைக் கழக துணை அமைப்புச் செயலாளராக இருந்து வருகிறார் ஆஸ்டின். இந்நிலையில், ஆஸ்டின் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்ததாக ஒரு தகவல் திடீரென பரவியது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி, எதிர்க்கட்சியான அதிமுகவில் இணைந்ததாக பரவிய தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மற்றவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியதில் வினோதமில்லை. ஆஸ்டினுக்கே இந்த தகவல் அதிர்ச்சி தானாம். அதிமுகவில் தான் இணைந்ததாக பரவிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஆஸ்டின். தான் உடல் நலக் குறைவு காரணமாக தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருவதாகவும், கட்சி மாறியதாக பரவிய தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில மாதங்களாக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரை அடுத்தடுத்து அதிமுகவில் இணைத்தார். திமுகவினர் பலரிடமும் அதிமுக தரப்பு பேசி வருவதாக கூறப்படும் நிலையில், இன்று திமுக மாநில நிர்வாகி அதிமுகவில் இணைந்ததாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து, அதிமுகவினர் பலரும், ஆஸ்டின் அதிமுகவில் இணைந்ததாக சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டனர். எம்ஜிஆர் காலத்து அதிமுக காரரான ஆஸ்டினை ஈர்த்துள்ளார் புரட்சித் தமிழர் எடப்பாடியார் என பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், ஆஸ்டின் மறுப்பு தெரிவித்தது அதிமுகவினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications