தமிழகத்தில் பாஜக ஆட்சியா.. வட மாநிலங்களை போல.. பொளக் பொளக் என கட்சிகளை பிளக்க முடியுமா.. சாத்தியமா?
வட மாநிலங்கள் போல தமிழகத்திலும் கட்சிகளை உடைத்து ஆட்சியமைப்பது சாத்தியமா??
சென்னை: கோவா, கர்நாடகத்தில் செய்தது போல தமிழகத்திலும் செய்து ஆட்சியைப் பிடிப்போம் என்று தமிழகத்துக்கான பாஜக பொறுப்பாளரான சிடி. ரவி கூறியுள்ளார். இது தமிழகத்தில் சாத்தியமாகுமா?
தமிழகத்தைப் பொறுத்தவரை பிற மாநிலங்களைப் போல கிடையாது. இங்கு தேசியக் கட்சிகளுக்கு பெரிய அளவில் செல்வாக்கு கிடையாது. காமராஜர் காலத்தோடு காங்கிரஸ் முடிந்துபோய் விட்டது. அதன் பிறகு பெயரளவுக்குத்தான் இங்கு காங்கிரஸ் உள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரை எப்போதுமே அது இங்கு முடிவை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக ஒருபோதும் இருந்ததில்லை. வெறும் சத்தங்களை மட்டுமே வைத்து அது தனது இருப்பைக் காட்டிக் கொள்ள முயல்வதாகவே மக்கள் கருதுகிறார்கள்.

தசாப்தங்கள்
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த பல தசாப்தங்களாக திராவிடக் கட்சிகள்தான் வேரூன்றி உள்ளன. தமிழ் தேசியவாத கருத்துக்கள் கடந்த சில ஆண்டுகளாகத்தான் உரத்து ஒலிக்கின்றன. ஆனாலும் திராவிடமே இன்னும் இங்கு வேரூன்றி உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

4 முனை தலைவர்கள்
காரணம் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என்ற இந்த நான்கு முனை தலைவர்களின் தாக்கம் இன்னும் மக்களிடையே ஆழமாக இருக்கிறது. இரட்டை இலை என்றால் கண்ணை மூடி கொண்டு ஓட்டுப் போடுகிற கூட்டத்தை கிராமங்களில் இன்றும் அதிகமாக பார்க்க முடியும். அதேபோலத்தான் கருணாநிதி, உதயசூரியன் என்றாலே நாடி நரம்பு புடைக்க ஓட்டு போடவும், பிரச்சாரம் செய்யவும், ஓடாய் தேயவும் ஒரு கூட்டம் இருக்கிறது.

தாக்கம்
இதைத் தாண்டிய புதிய சக்தியை இதுவரை தமிழகம் கண்டுபிடிக்கவில்லை. இடை இடையே எத்தனையோ வந்தன.. தேமுதிக போல.. ஆனால் அவை குறுகிய நேர பரபரப்புகளாக இருந்தனவே தவிர பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களாக அமைந்திருக்கவில்லை.

திமுக
ஒரு கட்சியை உடைப்பது என்பது தமிழகத்தை பொறுத்தவரை அத்தனை எளிதானது கிடையாது.. திமுக பலமுறை உடைந்தது.. ஆனால் உடைந்து போய் வெளியேறிவைதான் பலமிழந்தனவே தவிர திமுக அப்படியேதான் உள்ளது. அதிமுக உடைந்தது.. பிரிந்து போனவர்கள்தான் பலவீனமானார்களே தவிர அதிமுக அப்படியேதான் உள்ளது. இது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் ஆச்சரியமானது மட்டுமல்ல.. இதுதான் தமிழக அரசியலின் உண்மையும் கூட.

அதிமுக
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் கூட அதிமுக பெரிதாக பலவீனப்படவில்லை. அப்படியேதான் இருக்கிறது. இரு பிரிவாக பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தார்கள். ஆட்சி, அதிகாரம், பணம், செல்வாக்கு இதை இழக்க விரும்பாமல்தான் இணைந்துள்ளார்கள் என்று கூறினாலும் கூட தொண்டர் பலம் அதிமுகவுக்கு அப்படியேதான் உள்ளது. அதையும் மனதில் கொண்டுதான் அதிமுக இன்று வரை கட்டுக்கோப்பாக இருந்து வருகிறது.

உடைப்பதா?
இப்போது சிடி ரவி பேச்சுக்கு வருவோம்.. தேர்தலுக்குப் பின்னர் திமுகவோ அல்லது அதிமுகவோ பெரும்பான்மை பெற்று விட்டால் அல்லது வேறு எந்தக் கட்சிக்காவது பெரும்பான்மை கிடைத்தால் இந்தக் கேள்வியே எழாது. அதாவது உடைப்புக்கான வாய்ப்பு 99% குறைவுதான். எனவே பெரும்பான்மை பலம் யாருக்குக் கிடைக்கிறதோ அந்தக் கட்சி உடைவதிலிருந்து தப்ப வாய்ப்புகள் அதிகம்.

பாஜக
ஒரு வேளை திமுகவும் சரி, அதிமுகவும் சரி பெரும்பான்மை பலம் பெறவில்லை என்ற நிலை ஏற்பட்டால் உடைப்பு பணிகள் வேகம் பிடிக்கும்... பாஜக நிச்சயம் இந்த இடத்தில்தான் தனது வேலையை விறுவிறுப்பாக்கும்... சிடி ரவி சொன்ன விஷயமும் கூட இதைத்தான் குறிக்கிறது. அப்படி நடைபெறும் போது முதலில் உடைபடும் கட்சி அதிமுகவாக இருக்கும். உடையாமல் அப்படியே பாஜக சொல்வதை கேட்கும் நிலைக்கும் கூட அதிமுக போககூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. காரணம் ஜெயலலிதாவுக்கு பிந்தைய ஆட்சியின் அனுபவத்தை அவர்கள் மறக்க மாட்டார்கள் என்பதால்.

திமுக உடையுமா?
இன்னொரு காட்சியையும் நாம் கற்பனை செய்து பார்க்கலாம்... அதாவது திமுகவுக்கு பெரும்பான்மைக்கு சில இடங்களே தேவை என்ற நிலை ஏற்படுகிறது என்று வைத்து கொள்வோம்... அதேசமயம், அதிமுகவுக்கும் ஓரளவுக்கு இடம் கிடைத்திருக்கிறது. அதேசமயம், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு சொற்ப இடங்களே கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால், அப்போது திமுகவை உடைக்க முயற்சிகள் நடக்கலாம். அதேசமயம், திமுக உடையுமா என்று கேட்டால்.. அவர்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களைப் பொறுத்தது அது!!

ஊழல்கள்
இந்த இடத்தில்தான் திமுக கவனமாக இருக்க வேண்டும். அதாவது வேட்பாளர்களை சுத்தமானவர்களா, ஊழல்வாதிகளாக இல்லாமல் பார்த்து பார்த்து எடுத்து வெற்றி பெற வைத்தால் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவோ அல்லது அதிமுகவோ சிரமப்பட நேரிடும். இது எல்லா கட்சிகளுக்குமே பொருந்தும். சமீப காலமாக பாஜக தன் பக்கம் இழுக்கும் தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் யார் என்று சற்று ஆய்ந்து பார்த்தால் ஏதாவது சிக்கலில் மாட்டியிருப்பவர்கள், பணக் கஷ்டத்தில் இருப்பவர்கள், ஊழல்வாதிகள், தவறு செய்தவர்களாகத்தான் 90 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.

விசுவாசம்
எனவே வேட்பாளர் தேர்வு, வேட்பாளர்களின் நேர்மை, வேட்பாளர்களின் தலைமை விசுவாசம், வேட்பாளர்களின் கட்சி விசுவாசம் என பல முக்கிய அம்சங்களை பார்த்து வேட்பாளர் தேர்வை நடத்த வேண்டிய மிகப் பெரிய கட்டாயத்தில் திமுகவும் சரி, அதிமுகவும் சரி உள்ளன. இதெல்லாம் சரியாக இருந்தால் கட்சிகள் உடையாமல் காப்பாற்ற ஓரளவுக்கு வாய்ப்புண்டு. அதில் எங்காவது ஓட்டை இருந்தால் கட்சியையும், ஆட்சியையும் மறந்து விட்டு புலம்ப வேண்டியதுதான்!!












Click it and Unblock the Notifications