தனித்து வாழும் பெண்களுக்கு ரேஷன் கார்டு!-முதல்வர் ஸ்டாலின் முடிவு சரியா?
சென்னை: இந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் பெண்களின் நலன் மீது அக்கறை கொண்டிருப்பதாக உள்ளது. கட்டணம் இல்லாத பேருந்து பயணம் தொடங்கி, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வரை அனைத்து திட்டங்களும் பெண்கள் நலன் சார்ந்த வெளிப்பாடுகள்தான்.
அதன் தொடர்ச்சியாக இப்போது கணவனை விட்டுப் பிரிந்து வாழும் பெண்கள் அல்லது மண முறிவுக் காரணமாகத் தனியாக வாழும் பெண்களின் நலனை மனதில் கொண்டு, அவர்களுக்குத் தனிக் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

கணவனுடன் சேர்ந்து வாழும்போது குடும்ப அட்டைகள் மூலமாக வழங்கப்படும் நிதி உதவிகள் நேரடியாகப் பெண்கள் கைக்குப் போய்ச் சேர்வதில்லை. குறிப்பாக மழைக்கால நிவாரணம், பொங்கல் பரிசுத் தொகை போன்ற திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நிதியை, குடும்பத்தலைவரே அதிகப்படியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.
அதை உணர்ந்ததால்தான் இந்த 'திராவிட மாடல்' அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற புதிய ஒரு திட்டத்தைச் சமீபத்தில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதனால் சுமார் 1.06 கோடி பெண்கள் பலனடைந்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்திற்காக மட்டும் 7000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தத் திட்டம் இந்தியா முழுமைக்குமான பேசு பொருளாக மாறியுள்ளது. இத்திட்டத்தின் சிறப்பை உணர்ந்த கர்நாடக அரசு அப்படியே தங்களின் மாநிலத்தில் செயல்படுத்தி உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இப்போது தனித்துவம் மிக்க ஒரு திட்டத்திற்கு வழி வகுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். கணவன் இல்லாமல், அல்லது மணவிலக்குப் பெற்றுத் தனித்து வாழும் பெண்களை ஒரு குடும்பமாக அங்கீகரித்துள்ளார்.

பலருக்கும் அரசின் திட்டங்கள் போய்ச் சேருவதைப் போல, இவர்களுக்குக் கிடக்கவேண்டும் என்பதை உறுதிசெய்யும் விதமாக இத்திட்டத்திற்குச் செயல்வடிவம் தந்துள்ளார்.
இதற்கு முன்னதாக, கணவனைப் பிரிந்து வாழும் பெண்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் தரப்படும் பொருட்கள் கிடைக்காது. திருமணமே செய்துகொள்ளாமல் தனித்து வாழும் பெண்களுக்கும் அச்சலுகைகள் போய்ச் சேராமல் இருந்தது.

இதைப்போன்று கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று வாழ்ந்துவந்த பெண்களுக்கும் குடும்ப அட்டை இல்லாததால் அரசினர் தரும் பல்வேறுவிதமான பலன்களைப் பெறுவதில் சிக்கல் இருந்துவந்தது. அந்தத் தடைகளை எல்லாம் தவிடுபொடியாக்கி உள்ளது இந்த அரசாணை.
இனி, கணவனிடம் இருந்து விவாகரத்து வாங்கியதற்கான சட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவை இல்லை.

தனித்து வாழும் பெண்கள் எனக் கோரிக்கை வைத்தால், அதனை ஏற்றுக் குடும்ப அட்டைகள் வழங்கப்படும். அதற்கான அறிவுறுத்தல் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு உரிய அறிவுரை அரசு வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்களின் மனநிலை என்ன என்பதை அறியச் சிலரிடம் பேசினோம்.

இது குறித்து நாம் சந்தித்துக் கேட்ட அனைத்து பெண்களும் வயது வரம்பற்று ஏக மனதாக இத்திட்டத்தை வரவேற்றே பேசினர். "இதன் மூலம் ரேஷன் கடையில் போடப்படும் 5 கிலோ அரிசியாவது அவர்களுக்குக் கிடைக்குமே? அதைவைத்து நிம்மதியாக ஒருவேளையாவது அந்தப் பெண்கள் சாப்பிடலாமே?
ஆகவே தனித்து வாழும் பெண்களுக்கு குடும்ப அட்டை தருவதைத் தாராளமாக வரவேற்கிறேன்" என்கிறார் மஞ்சள் புடவையில் மங்களகரமாகக் காட்சி தந்த அந்தப் பாட்டி.

இவரைத்தொடர்ந்து பேசிய இரண்டு நடுத்தர வயது பெண்கள், "ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே குடும்ப அட்டை என்பது இல்லை. அரசாங்க ஆவணமாகவும் பல நேரங்களில் கேட்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது தனித்து வாழும் பெண்கள் எந்த ஆவணத்தைக் காட்டி அரசிடம் கோரிக்கை வைக்க முடியும்? ஆகவே இப்படி வழங்குவது மிகமிக அவசியம். அதைச் செய்தது மகிழ்ச்சி" என்றனர்.

சாலை ஓரமாகப் பூக்கடை நடத்தும் பாட்டி ஒருவர் நாம் இந்தக் கேள்வியைக் கேட்டதும் தன் முழு ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டர். "அந்தக் காலத்தில் எல்லாம் பெண்களை மதிக்கவே மாட்டார்கள். இந்த ஆட்சியில் பெண்களுக்கு அவ்வளவு மரியாதை தருகிறார் நம் முதலமைச்சர்.
நான் என் வீட்டுக்காரரை விட்டுப் பிரிந்துதான் வாழ்கிறேன். அடி என்றால் கொஞ்ச நஞ்சமல்ல; என் மண்டை முழுக்க காயங்கள். எனக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. தனிக் குடும்ப அட்டை இருந்திருந்தால், யார் உதவியையும் எதிர்பார்க்காமல் நான் கூழோ, கஞ்சியோ சாப்பிட்டு வாழ்ந்திருப்பேனே?

இன்றைக்கு என்னைப் போல இல்லை பெண்கள். அதிகமாக முன்னேறிவிட்டனர். அவர்கள் எப்படி முன்னேறினார்கள். அரசுதான் அவர்களை முன்னேற்றியது. அப்படித்தான் இந்தத் திட்டமும். தனியாக வாழும் பெண்களை இது கட்டாயம் முன்னேற்றும். தைரியமாக வாழலாம். அந்தத் தைரியத்தை அரசாங்கம் கொடுத்து வருகிறது. அன்று இப்படி இல்லை. பெண்கள் அடிமையாக இருந்தார்கள். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?" என்று ஒரு பேராசிரியரைப் போலப் பாடம் எடுத்து நமக்குப் புரியவைத்தார் அவர்.

வேலைக்குச் சென்று வரும் இரண்டு ஆண்களிடம் பேசியபோது 'கட்டாயம் தரவேண்டும். அதில் தவறு இன்றும் இல்லை. பாதிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அரசு அவர்கள் பக்கம் நிற்கவேண்டும். அதைத்தான் முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆகவே அவரது இந்த முடிவு வரவேற்கத்தக்கது' என்றனர்.

வேலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவர் நாம் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்து தன் கருத்தை பகிர்ந்துகொள்ள முன்வந்தார். அவர், "இந்த அரசு பெண்களுக்கு அதிகமான திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது. திமுக அரசு மற்ற அரசுகளைவிடப் பெண்கள் மீது அதிக அக்கறையைக் காட்டிவருகிறது. அதைக் கட்டாயம் வரவேற்கிறேன்.

முதலில் பேருந்தில் கட்டணம் இல்லை என்றார் முதல்வர் ஸ்டாலின். அடுத்து ஆயிரம் ரூபாய் கொடுத்தார். இப்போது ரேஷன் கார்டு தருகிறார். உண்மையில் அவருக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்தான் பெண்களின் மனதை உணர்ந்து திட்டங்களைச் செயல்படுத்துகிறார். அதை ஒரு பெண்ணாக நான் வரவேற்பது கடமை" என்கிறார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications