காளியம்மாள் அங்கே போறாங்களா? திமுக வேற கூப்பிடுதாமே.. விஜய்க்கும் ஒரே பாராட்டு.. என்னாச்சு தெரியுமா
சென்னை: சீமான் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள், அடுத்து எந்த கட்சிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி கொண்டேயிருக்கிறது.. தவெக கட்சியில் இணைவார் என்ற தகவல்கள் பரபரப்பாக பரவிய நிலையில், இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை காளியம்மாள்.. தற்போது, எந்த கட்சியில் இணைவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு காளியம்மாள் தந்திருக்கும் பதில் என்ன தெரியுமா?
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கியவர் காளியம்மாள்... அந்த கட்சியில் சீமானுக்கு பிறகு, பிரச்சார பீரங்கியாகவும் விளங்கியவர்.. ஒவ்வொரு தேர்தலின்போதும், காளியம்மாளின் பிரச்சார பேச்சுகள் இணையத்தில் வைரலாகிவிடும்.

எனினும் சீமானுடன் ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடும், அதையொட்டி சீமானுடன் காளியம்மாள் பேசியிருந்த ஆடியோ ஒன்றும் பரவி பரபரப்பை தந்தது.. இதையடுத்து, அவர் கட்சியிலிருந்து விலகுவார் என்றும் பேச்சுகள் வலம்வந்தன.. அதன்படியே, நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுவதாக காளியம்மாள் அறிவித்தார்..
தவெக விஜய்
இதையடுத்து, காளியம்மாள் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.. அநேகமாக தவெக 2ம் ஆண்டு துவக்க விழாவில் இணையக்கூடும் என்றும் முக்கிய பதவி ஒன்றினை விஜய் தருவார் என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்தன.. ஆனால், காளியம்மாள் விஜய் கட்சியில் அன்றைய தினம் இணையவில்லை.. இதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், காளியம்மாளிடம் விஜய் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.. எதிர்பார்த்தபடியே முக்கிய பதவியை காளியம்மாளுக்கு தருவதற்கு விஜய்யும் தயாரானாராம்.
ஆனால், திடீரென திமுகவை சேர்ந்த ராஜீவ் காந்தி, காளியம்மாளிடம் பேசி, எம்.பி. சீட்டுக்காக மேலிடத்தில் பேசுவதாக கூறி திமுகவுக்கு அழைப்பு விடுத்தாராம். புதிய கட்சிக்கு சென்று முக்கிய பதவி தருவதைவிட, திமுகவில் எம்பி சீட் கிடைத்தால் தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று காளியம்மாளும் யோசிப்பதாக தெரிகிறது..
இப்படியெல்லாம் செய்திகள் கசிந்த நிலையில், திமுக தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான பச்சை சிக்னலும் வரவில்லை என்றே தெரிகிறது.. ஒருவேளை ராஜீவ் காந்தி குறித்து பரவியிருந்த தகவலே புரளியா? அல்லது நிஜமாகவே திமுகவில் காளியம்மாளுக்கு இடம் உள்ளதா? அல்லது விஜய் கட்சியில் இணைய காத்திருக்கிறாரா? என்றெல்லாம் உறுதியாக தெரியவில்லை..
காளியம்மாள் அதிரடி
இப்படிப்பட்ட சூழலில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார் காளியம்மாள்.. அப்போது, "கடந்த தேர்தல்வரை, கட்சிகள் குறித்த நிலைப்பாடு, தேர்தல் கணிப்பு, வெற்றிகளை ஓரளவு அனுமானித்து சொல்லிவிட முடியும். ஆனால், இப்போதுள்ள அரசியல் சூழலில், அனுமானித்து சொல்ல முடியவில்லை.. மக்களும் பாதிக்கப்பட்ட சூழலில் உள்ளதால், என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை..
அரசியல் கட்சிகளிடையே கூட்டணியும் இதுவரை முடிவாகவில்லை.. அதுமட்டுமல்லாமல், நான் அரசியல் விமர்சகரும் இல்லை.. நானும் மக்களில் ஒருத்திதான்.. விஜய்யின் வருகையானது, இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தாக்கம் இருக்கும். இப்போதே அதனை பார்க்க முடிகிறது..
மக்கள் பிரச்சனைகள்
அதேசமயம், மக்களுக்காக பிரச்சனைகளை கையிலெடுத்தால் விஜய்யால் இன்னும் பெருமளவில் பெண்கள், இளைஞர்களை ஈர்க்க முடியும்.. என்னை பொறுத்தவரை, எப்போதும் ஒரே நிலைப்பாடுதான்.. மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கக்கூடிய இடத்தில், மக்கள் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய இடத்தில் இருப்பேன்
நான் ஒரு கட்சியில் இணைவதாக இருந்தால், அதை நானே முறைப்படி அறிவிப்பேன்.. அப்படி இணையும்போது எதுக்காக ஒரு கட்சியில் இணைகிறேன் என்பதற்கான காரணத்தையும் நான் சொல்ல வேண்டும்.. எனவே, ஒரு கட்சியில் இணைவது என்பதை ரகசியமாக செய்ய முடியாது.. அனைவரையும் அழைத்து அறிவிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications