தூதுவர் வருகிறார்.. டார்ச் லைட் வெளிச்சத்தை நாடும் சூரியன்.. காங்கிரசுடன் பேச கமலை அனுப்பும் திமுக?
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை ஒரு "தூதுவராக" திமுக தலைமை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி என்ன?
கடந்த சில வாரங்களாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி (TNCC) ஆளுங்கட்சியான திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு (Cabinet Berths) வேண்டும் என்று பிடிவாதம் காட்டி வருகிறது. ஆனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், "தமிழக அரசியலில் அதிகாரப் பகிர்வு முறை ஒத்து வராது" என்று கூறி காங்கிரஸின் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார். இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ், அதிக இடங்களைப் பெறவும், கூட்டணிக்குள் தனது செல்வாக்கை நிலைநாட்டவும் டெல்லி மேலிடம் மூலம் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.
ஆனால் காங்கிரஸ் தரப்போ, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையும் அரசாங்கத்தில் காங்கிரஸிற்குப் அதிக பங்கு இருக்க வேண்டும். இது வெறும் வாய்மொழி வாக்குறுதியாக இல்லாமல், முறைப்படியான 'ஒப்பந்தமாக' இருக்க வேண்டும். கட்சியின் தற்போதைய பலத்தைப் பிரதிபலிக்கும் வகையில், கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும். இதன் மூலம் சட்டமன்றத்தில் காங்கிரஸின் பலத்தை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது.
கமல்ஹாசன் எனும் சமாதான தூதுவர்
இந்த முட்டுக்கட்டையை உடைக்க, திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு புத்திசாலித்தனமான நகர்வை மேற்கொண்டுள்ளார். நடிகர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசனை, காங்கிரஸ் மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட டார்ச் லைட்டின் வெளிச்சத்தை நாட சூரியன் முடிவு செய்துள்ளது. ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான உறவு கொண்டுள்ள கமலைப் பயன்படுத்தி, காங்கிரஸை இறங்கி வரச் செய்ய திமுக திட்டமிட்டுள்ளது.
கமலின் பங்கு என்ன?
கமல்ஹாசன் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, திமுகவின் நிலையைத் தெளிவுபடுத்த உள்ளார். குறிப்பாக:
காங்கிரஸ் எதிர்பார்க்கும் 40 இடங்களுக்குப் பதிலாக 30 முதல் 32 இடங்களுக்குள் சமரசம் செய்துகொள்ள வலியுறுத்துவது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதை விடுத்து, பாஜக மற்றும் விஜய்-ன் தமிழக வெற்றி கழகம் (TVK) போன்ற சக்திகளைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை எடுத்துரைப்பது.
கூட்டணியில் விரிசல் ஏற்பட்டால் அது எப்படி எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக அமையும் என்பதை ராகுல் காந்தியிடம் விளக்குவது.
திமுகவின் வியூகம்
திமுகவைப் பொறுத்தவரை, காங்கிரஸ் அதிக இடங்களைக் கேட்டால் அது மற்ற கூட்டணிக் கட்சிகளான விசிக (VCK), மநீம மற்றும் இடதுசாரி கட்சிகளின் இடங்களை பாதிக்கும் என்று கருதுகிறது. கமல்ஹாசன் ஏற்கனவே தனது கட்சிக்கு அதிக இடங்கள் கேட்காமல், மாநிலங்களவை பதவியைப் பெற்றுக் கொண்டு திமுகவுடன் இணக்கமாகச் செயல்படுவதால், அவரையே முன்னிறுத்தி காங்கிரஸையும் "தியாகம்" செய்யத் தூண்டுகிறது திமுக தலைமை.
முடிவு என்னவாகும்?
பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீட்டுக் குழுக்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளன. அதற்குள் கமலை வைத்து டெல்லி மேலிடத்தைச் சரி செய்ய திமுக முயல்கிறது. இந்த "உலகநாயகன்" தூது காங்கிரஸின் பிடிவாதத்தைத் தளர்த்துமா அல்லது கூட்டணிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்துமா என்பது வரும் வாரங்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications