மகனை களமிறக்கும் திட்டத்தில் சேகர்பாபு! ஸ்டாலினிடம் அறிமுகப்படுத்தி அரசியலுக்கு பிள்ளையார் சுழி!
சென்னை: இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது மகன் ஜெய சிம்மனை அரசியலில் களமிறக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.
சட்டப்படிப்பை முடித்துள்ளதால் தனது மகன் ஜெயசிம்மனை விநாயகர் சதுர்த்தியான இன்று முதல்வர் ஸ்டாலினிடத்தில் அறிமுகப்படுத்தி வாழ்த்து பெற அழைத்துச் சென்று அரசியல் என்ட்ரிக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.
அமைச்சர்களின் வாரிசுகள் பலரும் ஏற்கனவே திமுகவில் முக்கியப் பதவிகளில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் சேகர்பாபு
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்பது போல் கட்சிப் பணியாக இருந்தாலும் சரி ஆட்சிப்பணியாக இருந்தாலும் சரி எடுத்த காரியத்தை முடிக்கும் வரை பம்பரமாக சுழன்று காரியமாற்றக் கூடியவர் அமைச்சர் சேகர் பாபு. இவரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும் என்பதும் குறிப்பாக கட்சிக்காரர்களுக்கு ஒரு உதவி என்றால் முதல் ஆளாக இவர் செய்வதும் இவருக்கு இருக்கும் பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.

மிஸ்டு கால்
தனது அலைபேசியில் எத்தனை மிஸ்டு கால்கள் இருந்தாலும் அதனை திரும்ப அழைத்து விவரம் கேட்கக்கூடியவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படி அன்பாலும், பாசத்தாலும் வடசென்னையில் பகுதியில் தனக்கென பெரிய கூட்டத்தையே வைத்திருக்கிறார் இவர். அடித்தட்டு நிலையில் இருந்து வளர்ச்சி அடைந்தவர் என்பதால் இயல்பாகவே அவர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து அவர்கள் கேட்காமலேயே உரிய நேரத்துக்கு உதவிகளை செய்து வருகிறார் சேகர்பாபு.

ஸ்டாலின் மரியாதை
அமைச்சர் சேகர் பாபுவை செயல்பாபு என பலமுறை பாராட்டி பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர் மீது தனிப்பட்ட முறையில் நன்மதிப்பை வைத்திருக்கிறார். இப்படி தலைமையிடத்திலும் தொண்டர்கள் மத்தியிலும் நற்பெயரை ஈட்டி வைத்துள்ள இவர், அடுத்தக்கட்டமாக அரசியலில் தனது மகன் ஜெய சிம்மனை களமிறக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. மூத்த மகன் விக்னேஷ் சற்று மென்மையானவர் என்பதால் அவர் படித்த படிப்புக்கேற்ப பணியை கவனித்து வருகிறார்.

பிள்ளையார் சுழி
இதனிடையே இளைய மகன் ஜெய சிம்மன் தனது தந்தை சேகர் பாபுவை போல் பொதுவாழ்வில் ஈடுபட விரும்பியதால் தான் சட்டப் படிப்பை விரும்பி படித்து முடித்திருக்கிறார். சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ள ஜெய சிம்மனை முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற அமைச்சர் சேகர்பாபு அழைத்துச் சென்றிருப்பதை பார்த்தால் மகனின் அரசியல் என்ட்ரிக்கு விநாயகர் சதுர்த்தியான இன்று அமைச்சர் சேகர்பாபு பிள்ளையார் சுழி போட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

பிறந்தநாள்
கருணாநிதி பிறந்தநாள், ஸ்டாலின் பிறந்தநாள், என வருடத்தின் பாதி நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடியவர் அமைச்சர் சேகர்பாபு. இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள இவர் தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications