Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

#Exclusive ஒரே வார்த்தையில் வெட்ட வெளிச்சம்.. ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி? ப்ரியன் vs கலை விவாதம்

ஓபிஎஸ் முடிவு அவருக்கு பெரும் பின்னடைவை கொடுத்திருக்கிறதா என்பது பற்றி ப்ரியன் - கலை இருவரும் விவாதித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, போட்டியிலிருந்து விலகியது அவரது அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறதா என்பது பற்றி நமது ஒன் இந்தியா விவாத நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் மற்றும் அரசியல் விமர்சகர் கலை ஆகியோர் விவாதித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்புக்குப் போட்டியாக இடைத்தேர்தல் களத்தில் இறங்கிய ஓபிஎஸ், தனது முடிவில் இருந்து பின்வாங்கியது அவருக்கு பெரிய பின்னடைவைத் தந்திருக்கிறது.

இந்த விவகாரம் ஓபிஎஸ், அதிமுகவுக்கு உரிமை கோருவதில் பலவீனத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி விவாதித்துள்ளனர். நெறியாளரின் கேள்விகளும், ப்ரியன் - கலை இருவரின் பதில்களும் இனி..

ஓபிஎஸ்ஸுக்கு பாஜக ஆதரவு இல்லை?

ஓபிஎஸ்ஸுக்கு பாஜக ஆதரவு இல்லை?

கேள்வி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஓபிஎஸ் விலகிவிட்டார். உடனே, பாஜக ஓபிஎஸ்ஸை தூக்கி எறிந்துவிட்டதாகவும், ஈபிஎஸ்ஸுக்கு முழு ஆதரவு என்றும் பேச்சுகள் நிலவுகின்றன. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கலை : உச்ச நீதிமன்ற உத்தரவிலேயே, இந்த தீர்ப்பு இந்த இடைத்தேர்தலுக்கு மட்டும் தான் பொருந்தும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த இடையீட்டு மனு தீர்ப்புக்கும் பிரதான வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால், கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்றுவிட்டது எனச் சொல்ல முடியாது. தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு கிடைத்திருக்கிறது. அது அவருக்கு பிளஸ். தொடக்கத்திலிருந்தே ஓபிஎஸ், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டினார். யார் பின்னாலாவது சென்று ஒளிந்துகொள்ள நினைத்தார். வாபஸ் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடு தான் ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக போட்டியிட்டால் வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்றும் ஓபிஎஸ் சொன்னார்.

எடப்பாடி கணக்கு

எடப்பாடி கணக்கு

தான் பின்வாங்குவதை தெள்ளத் தெளிவாக காட்டினார் ஓபிஎஸ். அது தவறான நடவடிக்கை. ஓபிஎஸ் பலவீனமாக இருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமானது. இரு தரப்புக்கும் தனி சின்னம் கிடைத்து போட்டியிட்டாலும் தேர்தலில் மிகக்குறைவான வாக்குகள் கிடைத்தால் ஓபிஎஸ் நிலை பட்டவர்த்தனமாகி விடும். அந்த வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் எடப்பாடி பழனிசாமி விரும்பினார். கடந்த தேர்தலைப் போலவே தமாகா வேட்பாளரை நிறுத்திவிட்டு ஈபிஎஸ் விலகியிருக்கலாம். ஆனால், அவர்களிடம் பேசி தனது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தார். தனது வலிமையை நிரூபிக்க இந்த இடைத்தேர்தலை பயன்படுத்த நினைத்தார். ஓபிஎஸ் போட்டியாக நின்றாலும் அவருக்கு பின்னடைவு தான் ஏற்படும், கொங்கு மண்டலம் நமக்கு சாதகமானது என கணக்குப் போட்டுத்தான் களமிறங்கினார் எடப்பாடி பழனிசாமி.

 நிலையாக இல்லை

நிலையாக இல்லை

கேள்வி : இனி அதிமுகவே எடப்பாடி பழனிசாமி தான் என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது. ஒரு இடைத்தேர்தலை வைத்தே ஓபிஎஸ், ஜானகி போல விட்டுக்கொடுத்துச் சென்றுவிடுவார் என்று முன்வைக்கப்படும் பார்வையை எப்படி பார்க்கிறீர்கள்?

ப்ரியன் : தார்மீக ரீதியான ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் அதில் ஒரு நிலைத்தன்மை வேண்டும். அது இல்லையென்றால் பின்னுக்குத் தள்ளப்படுவீர்கள். ஓபிஎஸ் விஷயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. உட்கட்சி தேர்தல் மூலம் தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை நீக்க முடியாது என்ற விஷயத்தை கையில் எடுக்கிறார். ஈபிஎஸ் ஒருபக்கம் தன்னிடம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது, தானே ஒற்றைத் தலைமை என்ற முடிவை எடுக்கிறார். கட்சி சட்ட ரீதியான விஷயத்திற்கும் பெரும்பான்மைக்கும் இடையே நடக்கும் போட்டிக்கு மத்தியில் கொங்கு பகுதியில் ஒரு இடைத்தேர்தல் வருகிறது. ஏற்கனவே வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் நிலையில் ஈபிஎஸ் ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்கிறார். அந்த விசாரணையில் சுப்ரீம் கோர்ட் அதிக ஆர்வம் காட்டி ஒரு உத்தரவைப் பிறப்பிக்கிறது.

 அடுத்த நாளே டமால்

அடுத்த நாளே டமால்

பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை முடிந்துள்ள நிலையில், பொதுக்குழுவே வேட்பாளரை தீர்மானிக்க வேண்டும் என உத்தரவு வருகிறது. சின்னத்திற்கு அவைத்தலைவர் கையெழுத்துப் போடவேண்டும் என்று உத்தரவு வருகிறது. ஆனால், ஓபிஎஸ் தரப்பு அவைத்தலைவர் நியமனத்தையே ஏற்க மறுக்கிறது. ஓபிஎஸ் விரும்பாத 2 விஷயங்கள் நடந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டது சரியான அணுகுமுறை அல்ல. உச்ச நீதிமன்றம் முன்வைத்த யோசனைகளை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். பிறகு அவைத்தலைவரின் நடவடிக்கைகள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறுவதாக இருப்பதாக ஓபிஎஸ் விமர்சித்தார். அதனால், மீண்டும் சட்டப் போராட்டம் நடத்தப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அடுத்த நாளே டமால் என வேட்பாளரை வாபஸ் பெறும் முடிவை எடுத்தார். ஆக, ஓபிஎஸ்ஸின் நிலைப்பாட்டில் உறுதித்தன்மை இல்லை.

எண்ட் கார்டு

எண்ட் கார்டு

கேள்வி : இந்த இடைத்தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு, ஓபிஎஸ் முடிவு ஆகியவற்றை வைத்து ஓபிஎஸ்ஸுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை என எழுந்து வரும் குரல்கள் பற்றி?

பதில் : தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று ஒருவருடன் மோதலை தொடங்கிவிட்டால், அதில் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது. ஜெயலலிதா அன்று இரட்டை இலைக்காக விட்டுக்கொடுக்காமல் போட்டியிட்டு, தனது பலத்தைக் காட்டியதால் தான் கட்சி அவர் கைக்கு வந்தது. இரட்டை இலை சின்னம் முடங்கக்கூடாது என்று சொல்லி பின்வாங்குவதெல்லாம் சால்ஜாப்பு. கொங்கு மண்டலத்தில் தனக்கு பலம் இல்லை என்று கருதியதால் ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம். இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அதிக வாக்குகளை பெற்றுவிட்டார் என்பதால் மட்டுமே எதிர்காலத்தில் கட்சி அவர் கையில் இருக்கும் என்று சொல்ல முடியாது. அரசியலில் இனி ஒன்றுமே இல்லை என்று நினைத்தவர்கள் எல்லாம் உச்சத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அரசியலில் யாருக்கும் அவ்வளவு எளிதாக 'எண்ட் கார்டு' போட முடியாது.

ஈபிஎஸ் தலைமையில் ஓபிஎஸ்

ஈபிஎஸ் தலைமையில் ஓபிஎஸ்

அதிமுகவை பொறுத்தவரை ஒற்றைத் தலைமைதான் சரியானதாக இருக்கும். 5 ஆண்டு காலம் ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து இரட்டைத் தலைமையாக நடத்தி வந்தாலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக எனும் கட்சி இன்னும் தனது தலைமையைத் தேடிக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஒரு எதிர்க்கட்சியாக வலிமையாக அதிமுகவை கொண்டு செல்கிறாரா என்று பார்க்க வேண்டும். ஓபிஎஸ் தனது நிலையில் பின்வாங்கி இருப்பதால், தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அவருக்கு பாஜக ஏதாவது உறுதி கொடுத்திருக்கிறதா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. எனினும், இனி ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸின் தலைமைக்குக் கீழ்தான் செயல்பட வாய்ப்புகள் அதிகம். ஓபிஎஸ் தனது வலிமையை நிரூபிக்காத வரை அவரை ஈபிஎஸ் ஏற்றுக்கொள்ளவும், ஓபிஎஸ் அரசியலில் மேலே வரவும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+