"பேனிக் பையிங்".. தக்காளி கூட ஓகே.. ஆனால் இது ரொம்ப கஷ்டமாச்சே.. விலை ஏற்றத்திற்கு என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்விற்கு இடையில் தற்போது மற்ற மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து உள்ளது. இந்த திடீர் விலை உயர்விற்கு பேனிக் பையிங் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.

ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹100 என்ற விலையில், தக்காளியின் விலை இப்போது சந்தையில் விற்கப்படுகிறது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்விற்கு இடையில் தற்போது துவரம் பருப்பின் விலையும் உயர்ந்து உள்ளது. தக்காளி இல்லாமல் கூட தமிழ்நாட்டில் குடும்பம் நடத்திவிடலாம். ஆனால் துவரம் பருப்பு மிகவும் அவசியம். அதிலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு துவரம் பருப்பு மிக முக்கிய புரத சத்து கொடுக்கும் பொருள்.
அதன் விலையும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.170 வரை விற்பனையாகிறது. கடந்த வாரம் 70-90 ரூபாய்க்கு விற்ற பருப்பு தற்போது 50-60 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. அண்டை மாநிலங்களில் விளைச்சல் கம்மியாக இருப்பதால் பருப்பு விலை உட்பட மளிகை பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது.
பேனிக் பையிங்: மிளகாய் தூள் விலை போன்ற பொருட்களின் விலை கூட இதில் உயர்ந்து உள்ளது. பொதுவாக மிளகாய் தூள் போன்ற மளிகை பொருட்கள் விலை இவ்வளவு வேகமாக உயராது. இந்த முறை இப்படி உயர காரணம் பேனிக் பையிங்காக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது ஒரு பொருள் விலை உயர்ந்தால் இன்னொரு பொருளும் விலை உயரும் என்ற அச்சத்தில் மக்கள் அதை வாங்கி குவிப்பார்கள். இது சங்கிலி வினையாக மாறி மளிகை பொருட்கள் பலவற்றையும் காசு இருக்கும் மக்கள் வாங்கி குவிப்பார்கள். இதனால் ஸ்டாக் குறைந்து தானாக பொருட்களின் விலை உயரும். மக்கள் அச்சத்தால் இப்படி பொருட்களை வாங்குவதே பேனிக் பையிங். இதுவும் இப்போது உயரும் பொருட்களின் விலைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
மீன் விலை: இன்னொரு பக்கம் மீன் விலையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன் பிடிப்பு அமலுக்கு உள்ளது. தமிழ்நாட்டில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், அடுத்த சீசனுக்கு மீன்கள் கடலில் இருக்கவும் மீன்பிடி தடைக்கலாம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இந்த தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். இந்த காலத்திற்கு பின் மீண்டும் மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள்.
அது போன்ற சமயங்களில் மீன் வாங்க பலரும் ஆசைப்படுவதால் மீன் விலையும் அதிகமாக இருக்கும். மீன் பிடி தடைக்காலத்திற்கு பின் வரிசையாக பலரும் மீன் வாங்குவதற்காக முந்தி அடிப்பதால் மீன் விலை அதிகமாக இருக்கும்.
ஆனால் இந்த முறை வழக்கத்தை விட அதிக அளவில் மீன் விலை உயர்ந்து கொண்டு இருக்கிறது. காரணம் மீன் பிடி தடை காலத்திற்கு பின்பும் பெரிதாக மீன் வரத்து இல்லை. கடலுக்கு செல்லும் மீனவர்கள் பெரிதாக மீன் பிடிக்காமல் குறைந்த அளவு மீன்களுடன் திரும்பி வருகின்றனர்.
மக்கள் பலரும் மீன்களை வாங்குவதற்காக முட்டிமோதிக்கொண்டு இருக்கும் நிலையில் மீன் வரத்து பெரிதாக இல்லை. கடலுக்கு சென்ற மீனவர்கள் பலரும் குறைந்த அளவு மீன்களோடு வந்ததால் ஞாயிற்றுக்கிழமை, திங்கள் கிழமை மீன் விலை மிக அதிகமாக இருந்தது.
ஒரு கிலோ வஞ்சிரம் மீன் 1400 ரூபாய் வரை கூட பல இடங்களில் விற்றது. சாலை, மத்தி, சங்கரா மீன்களின் விலையும் மிக அதிகமாக இருந்தது. சாதாரணமாக விற்கும் மீன்களின் விலையை விட நேற்றும், இன்று காலையும் மீன்களின் விலை 100 - 200 ரூபாய் அதிகம் இருந்தது. இந்த திடீர் விலை ஏற்றம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications