சனாதன சர்ச்சை.. பவன் கல்யாணை கைது செய்யும் சென்னை போலீஸ்? காவல் ஆணையரக அலுவலகத்தில் பரபரப்பு புகார்
சென்னை: சனானத்தை அழிக்க முயன்றால் அழிந்து போவீர்கள் என்று மறைமுகமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தான் தமிழகம் மற்றும் ஆந்திரா மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். அதேபோல் தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனசேனா கட்சியின் தலைவரான நடிகர் பவன் கல்யாண் துணை முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காலத்தில் இப்படி நடந்துள்ளது. அவர் இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தி விட்டதாக சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக அறிவித்தது.
அதேபோல் லட்டுவில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு உள்பட மேலும் சில பொருட்களை குறிப்பிட்டு அதில் ஏதேனும் ஒன்று லட்டுவில் இருக்கலாம் என்று ஆய்வக அறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. இது பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்த விஷயத்தில் துணை முதல்வர் பவன் கல்யாண் சொல்லும் கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில், ‛‛சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிந்து போவீர்கள்' என்று பவன் கல்யாண் கூறினார்.
இதன்மூலம் அவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். அதாவது சென்னையில தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு ‛சனாதன ஒழிப்பு மாநாடு' நடந்தது. இதில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், ‛டெங்கு, மலேரியா, கொரோனா உள்ளிட்டவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்க தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும்'' எனக்கூறியிருந்தார். இதனை மனதில் வைத்து தான் பவன் கல்யாண் பேசியதாக கூறப்படுகிறது.
பவன் கல்யாணின் இந்த கருத்தை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மற்றும் திமுகவினர் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். உதயநிதி போட்டோவை அவமதிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டனர். இந்த வீடியோவும் வெளியானது. இதையடுத்து பவன் கல்யாண் மீது தமிழகத்தில் பல போலீஸ் நிலையங்களில் திமுகவினர் மற்றும் அந்த கட்சியின் ஆதரவாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தான் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை இழிவுப்படுத்திய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், ‛‛ தமிழக துணை முதலமைச்சர் உதயநிதியை பவன் கல்யாண் விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது. பவன் கல்யாணின் இந்த செயல் ஆந்திர, தமிழக மக்களிடையே விரிசலை ஏற்படுத்தி, மோதலை தூண்டும் பேச்சாக அமைந்து இருக்கிறது. பவன் கல்யாணின் இந்த பேச்சை தொடர்ந்து, ஆந்திராவில் ஒரு தரப்பினர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து ஒட்டியிருந்த போஸ்டர் மீது ஏறி நின்று இழிவுப்படுத்துகின்றனர். இது தமிழகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பவன் கல்யாணின் கருத்து தமிழகம் - ஆந்திரா இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பவன் கல்யாண் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
இதனால் பவன் கல்யாண் மீது சென்னை போலீசார் நடவடிக்கை எடுக்கிறார்களா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் தற்போது வரை அந்த புகாரின் மீது சென்னை மாநகர காவல் ஆணையரகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications