சீமான் சர்வாதிகாரியா? தலைவர்களை வெளியேற்றுவது ஏன்? ரவீந்திரன் சொன்ன லாஜிக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்வதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒரு தெளிவான புள்ளிவிவரத்தை எடுத்துக் கூறி விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல் பின்புலம் எதுவுமே இல்லாமல் கட்சி தொடங்கி தேர்தல் களத்தைச் சந்தித்தவர் சீமான். ஆரம்பக் காலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சீமானுடன் இரண்டாம் கட்டத் தலைவர்கள் என சில இருந்தனர். அவரை அமீர் போன்ற திரை பிரபலங்களும் ஆதரித்து வந்தனர். அதற்கு அடுத்த கட்டமாக நாதகவில் ராஜீவ்காந்தி, கல்யாண சுந்தரம் எனச் சிலர் சீமானை அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி பேசி வந்தனர். ஊடகங்களில் மிகத் தீவிரமாக சீமானின் குரலாக ஒலித்து வந்தனர்.

seeman ntk

ஆனால், கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தொடர்ந்து கட்சிக்குள் ஒரு சலசலப்பு நிலவி வருகிறது. உதாரணமாக அக்கட்சியின் அடையாளங்களில் ஒருவராக உள்ள காளியம்மாள் ஓரங்கட்டப்பட்டார். அவரைப் பற்றி சீமான் 'பிசிறு’ என்று பேசிய ஆடியோ வெளியாகி அதிர்வை உண்டாக்கியது. அதன்பின்னர் காளியம்மாள் தொடர்ந்து 4 கூட்டங்களில் பங்கேற்காமலிருந்து வந்தார். அதற்காக விளக்கத்தை அவர் எடுத்துக் கூறி இருந்தாலும், சீமானுக்கும் அவருக்குமான உரசல் உள்ளபடியே தீர்க்கப்படவில்லை என்ற ஒரு கருத்து நிலவியது.

இதனிடையே மீண்டும் காளியம்மாளைப் பற்றி சீமான் பேசிய ஆடியோ ஒன்று பொதுவெளிக்கு வந்தது. இந்நிலையில்தான் கிருஷ்ணகிரி நிர்வாகிகள் சீமான் மீது சில குற்றச்சாட்டு முன்வைத்து கட்சியிலிருந்து வெளியேறினர். அதற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பிலிருந்து மாவட்டச் செயலாளர் சுகுமார் கட்சியைவிட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

நாதக என்றால் சீமான், இவர் இல்லை என்றால் கட்சியே இல்லை என்ற நிலைதான் யதார்த்தத்தில் இருக்கின்றது என்பது வெளியேறிய பலரின் குற்றச்சாட்டாக உள்ளது. ஆரம்பக்காலத்திலிருந்தே சீமான் இதே மனோபாவத்தைக் கடைப்பிடித்துத்தான் வருகிறார். இப்படி ஒரு நபரை நம்பி கட்சி இருப்பது சரியா? அதன் மூலம் நாதக வளர முடியுமா? ஆகிய கேள்விகளுக்கு விடை தெரியாமல் சீமானின் தொண்டர்கள் தவித்து வருகின்றனர்.

அது பற்றி சீமானின் நண்பரும் அவரது ஆதரவாளருமான ரவீந்திரன் துரைசாமி பேசுகையில், “சீமான் பாரம்பரிய அரசியல்வாதி கிடையாது. அவர் 2009 அதிமுகவை ஆதரித்தார். அடுத்து 2011, 2014இல் ஜெயலலிதாவையும் அதிமுகவையும் ஆதரித்தார். பின்னர் 2016 ஆம் தேர்தலில் 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டார். அப்போது 1.1% வாக்குகளைப் பெற்றார்.

நாதக என்பது சீமானை மட்டுமே முன்னிலைப்படுத்தும் தனிநபர் கட்சிதான். ஆகவேதான் அவர் இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்க வேண்டாம் என நினைக்கிறார். அப்படி 2ஆம் கட்டத் தலைவர்கள் உருவானால், அவர்களை திமுக, அதிமுக கட்சிகள் அரவணைத்துக் கொள்ளும். அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சீமான் 1.1% வாக்குகளைப் பெற்ற பிறகுதான் அய்யநாதன் வெளியேறினார். வியனரசு வெளியேறினார். அடுத்த தேர்தலில் சீமான் 3.8% வாக்குகளைப் பெற்றார். இரண்டாம் கட்டத் தலைவர்கள் விலகுவதால் கட்சிக்குப் பாதிப்பு இல்லை என்பதையே இந்த வாக்கு சதவீதம் காட்டுகிறது.

இந்தளவுக்கு வாக்குகளைப் பெற்ற பிறகுதான் ராஜீவ்காந்தியும் கல்யாணசுந்தரமும் வெளியேறினார்கள். அதன் பிறகு வந்த தேர்தலில் நாதக 6.8% வாக்குகளைப் பெற்றது. இதற்கு அப்புறம் வெற்றிக்குமரன் வெளியேறினார். மதுரையில் மிகப்பெரிய ஆதரவாளர்களைக் கொண்ட தலைவர் அவர். அப்படி இருந்தும் 2024 தேர்தலில் நாதக 8.2% என்று அளவில் வாக்கு வலிமையை உயர்த்தி இருக்கிறது. மதுரையிலும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இதை எல்லாம் உணர்ந்ததால்தான் 'அதிருப்தியில் உள்ளவர்கள் எங்கே திருப்தியோ அங்கே போய்ச் சேர்ந்து கொள்ளலாம்’ என்று சீமானே பேட்டி அளித்திருக்கிறார். அவரது பேச்சு உணர்த்தும் செய்தியும் அதுதான்.

ஒருவர் வலிமை பெற்ற பிறகு வேறு கட்சிக்குப் போய்ச் சேர்வதால் கட்சிக்கு அது பின்னடைவை தரும். ஒருவர் பிரபலமாகாமல் வேறு கட்சிக்குப் போகும்போது அது வெளியே செய்தியாகாது. ஆகவே, அடிமட்ட நிலையில் தொண்டர்கள் இருந்தால் போது, அதற்கு மேலாக வளர்ந்துவிட்டு வேறு கட்சிக்கு விலை போவதைத் தடுக்கவே சீமான் இந்த முறையைக் கையாளுகிறார். அது கட்சியை வளர்த்துத்தான் இருக்கிறது. வீழ்ச்சியடையச் செய்யவில்லை.

நாதகவை உடைக்கும் முயற்சியை யாரேனும் செய்கிறார்களா? என்றால் அப்படி ஒரு தேவை ஆளும் கட்சிக்குத்தான் உள்ளது. ஆனால், ஸ்டாலின் அதைச் செய்யமாட்டார். அதனால் வரும் நஷ்டங்களை அவர் உணர்வார். சீமானை பற்றிப் பேசி அவரை வளர்த்துவிட வேண்டாம் என்றே அவர் நினைக்கிறார்.

ஆகவேதான் சீமானைப் பற்றி அவர் இதுவரை பேசவே இல்லை. தினகரனிடமிருந்து செந்தில் பாலாஜி திமுகவுக்குப் போனார். அவர் சென்றது தனக்கு நஷ்டம் தான் எனத் தினகரனே சொல்லி இருக்கிறார். செந்தில் பாலாஜி அளவுக்கு நாதகவில் யாரும் இல்லை. கமல்ஹாசனின் கட்சியில் கூட சில செல்வம் படைத்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் கட்சியைவிட்டும் போனார்கள். அப்படியான பணக்காரர்களும் சீமான் கட்சியில் இல்லை.

டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவையும் அதிமுகவையும் தோற்கச் செய்தவர். அவர் கட்சி 5% வாக்குகளைக் கொண்டிருந்தது. இப்போது 2.5%க்கு இறங்கிவிட்டார். கமலஹாசன் 3.7% வாக்குகளைப் பெற்றவர். இப்போது 2.5%க்கு போய்விட்டார். சீமான் அப்படியல்ல. 1.1% ஆக இருந்தவர் இன்று 8% மேல் வாக்குகளை உயர்த்திக் கொண்டே செல்கிறார். அவர் இலக்கே சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்குவது அல்ல. கட்சியின் வாக்கு சதவீதத்தை 1 கோடி அளவுக்கு உயர்த்துவதுதான். அதை அவரே சொல்லி இருக்கிறார்.

எனவே அவரது கட்சிக்கு அவர்தான் முகம். எப்படி இலங்கைத் தமிழர்களுக்குப் பிரபாகரன் ஒற்றை முகமாக இருந்தாரோ, அதைப் போல் நாதகவின் முகமாக சீமான் மட்டுமே இருப்பார். அப்படி இருந்தால்தான் கட்சி வளரும். அதற்கு இதுவரை கிடைத்துள்ள வாக்கு சதவீதமே சாட்சி” என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+